சென்னை கலவரத்திற்கு காவல்துறை தான் காரணம் என அன்புமணி ராமதாஸ் பேட்டி

பா.ம.க. இளைஞரணி தலைவரும், எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் இன்று கோவை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழ்நாடு முழுவதும் அமைதியாக நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு களங்கம் ஏற்படுத்த திட்டமிட்டு காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்கி இருக்கிறார்கள். இது சாதாரண செயல் அல்ல. திட்டமிட்டு செய்திருக்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம். இதுவரை சென்னை நகரம் பார்க்காத மிகப்பெரிய கலவரம் நடந்துள்ளது. என்னை பொறுத்தவரை இந்த கலவரத்திற்கு காரணம் காவல்துறை தான். என்னிடம் 4 வீடியோக்கள் இருக்கிறது. காவல்துறையை சார்ந்தவர்கள் ஆட்டோக்கள், குடிசைகள், வாகனங்களை கொளுத்தும் காட்சிகள் என இந்தியாவிலேயே எங்கும் நடக்காத ஒன்று தமிழ்நாட்டிலே நடந்து கொண்டிருக்கிறது. இதை பார்க்கின்ற போது ஏதோ ஒரு சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அது மட்டு மல்ல சமூக விரோதிகள் இந்த கலவரத்தை தூண்டி விட்டு, மாணவர்களுக்கு சம்பந்தம் இல்லாத சூழ்ச்சியாளர்கள், சமூகவிரோதிகள் எல்லாம் வேண்டுமென்றே கலவரத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். நேற்று வரை அமைதியான முறையில் மெரினா கடற்கரையில் நடந்த போராட்டத்தை வேண்டுமென்றே தடியடி நடத்தி அசாதாரண நிலையை ஏற்படுத்தினர். இந்த சம்பவங்களுக்கு நீதி விசாரணை நடத்த வேண்டும். ஓய்வு பெற்ற உச்சநீதி மன்ற நீதிபதி தலைமையில் நீதிவிசாரணை நடத்த வேண்டியது அவசியமானது. அல்லது சி.பி.ஐ. விசாரித்தால் தான் உண்மைகள் வெளிவரும். இது சம்பந்தமாக நாங்கள் கோர்ட்டுக்கு செல்ல இருக்கிறோம். இதுவரை இந்தியா பார்க்காத அறவழி போராட்டத்தை மாணவர்கள் நடத்தினர். 6 நாள் எந்த அசம்பாவிதங்கள்  நடைபெறாத சூழலில் நேற்று மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக உள் காரணங்கள் தெரிய வேண்டும். இது காவல்துறையினர் நடத்திய கலவரம் என்று நான் குற்றம் சாட்டுகிறேன். வாட்ஸ்அப் காட்சிகளை பார்க்கும் போது கலவரம் செய்தவர்கள் மாணவர்கள் கிடையாது. இதில் ஈடுபட்டவர்கள் தொழில் முறையாக கலவரம் செய்பவர்கள். என்னை பொறுத்தவரை அரசாங்கத்திற்கு ஒரு பிரச்சினை. யாருக்கோ நெருக்கடி கொடுப்பதற்காக இது நடந்துள்ளது. தமிழக அரசு 2 நாட்களுக்கு முன்பு கொண்டு வந்த அவசர சட்டம் குறித்து தெளிவாக மாணவர்களிடம் விளக்கி இருக்கலாம். நேற்று அவசர சட்டம் சட்டமன்றத்தில் நிறை வேற்றி சட்டமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் நோக்கம் நிறைவேறி இருக்கிறது. இதை அவர்களிடம் தெளிவாக கூறியிருந்தால் அவர்கள் கலைந்து சென்றிருப்பார்கள். இனி வரும் காலங்களில் குடிநீர் பிரச்சினை முதன்மையான பிரச்சினையாக இருக்கும். ஏற்கனவே கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் இடையே தண்ணீர் பிரச்சினை உள்ளது. ஏற்கனவே இருந்த அரசுகள் இந்த பிரச்சினையை சரியாக கையாள வில்லை. இதனால் நமது உரிமைகளை இழந்து வருகிறோம். தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளில் முதல்-அமைச்சர் பன்னீர் செல்வம் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களையும் டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரை சந்தித்து அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.