இங்கிலாந்து 278 ரன்கள் இலக்கு

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ‘ஏ’ பிரிவின் கடைசி லீக் ஆட்டம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இங்கிலாந்து அணி தனது இரண்டு லீக் ஆட்டத்திலும் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது. ஆஸ்திரேலியா விளையாடிய இரண்டு போட்டியும் மழையினால் கைவிடப்பட்டது. இதனால் அந்த அணி இரண்டு புள்ளிகள் பெற்றுள்ளது. நேற்றைய போட்டியில் வங்காள தேசம் நியூசிலாந்தை வீழ்த்தியதால் அந்த அணி 3 புள்ளிகள் பெற்றுள்ளது.

ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்ற நிலையோடு ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 7.2 ஓவரில் 40 ரன்னாக இரக்கும்போது வார்னர் 21 ரன்கள் எடுத்த நிலையில் வுட் பந்தில் வெளியேறினார். 2-வது விக்கெட்டுக்கு பிஞ்ச் உடன் கேப்டன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடித்தனர்.

அணியின் ஸ்கோர் 22.5 ஓவரில் 136 ரன்னாக இருக்கும்போது பிஞ்ச் 64 பந்தில் 68 ரன்கள் சேர்த்து வெளியேறினார். ஸ்மித் 77 பந்தில் 56 ரன்கள் எடுத்தார். அதன்பின் டிராவிஸ் ஹெட்டை விட மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியாவின் ரன் விகிதம் குறைய ஆரம்பித்தது. அடில் ரஷித் பந்தில் ஹென்றிக்ஸ் (17), வடே (2), மிட்செல் ஸ்டார்க் (0), கம்மின்ஸ் (4) ஆகியோர் வெளியேறினாலும், ஹெட் கடைசி வரை நின்று 64 பந்தில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 71 ரன்கள் எடுத்தார். இதனால்  50 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 9 விக்கெட் இழப்பிற்கு 277 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணி தரப்பில் ரஷித் நான்கு விக்கெட்டுக்களும், வுட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் 278 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து பேட்டிங் செய்து வருகிறது.