இளைய சூப்பர் ஸ்டார் என்று என்னை அழைக்க வேண்டாம், சிவகார்த்திகேயன்

நடிகர் தம்பிராமையாவின் மகன் உமாபதி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ள படம் ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர்கள் எஸ்.வி.சேகர், சிவகார்த்திகேயன், பொன்வண்ணன், டைரக்டர்கள் கே.எஸ்.ரவிக்குமார், பேரரசு, பிரபு சாலமன், விஜய், சுராஜ், அறிவழகன், துரை செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு பேசினார்கள்.

தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசும்போது, “சிவகார்த்திகேயன் படங்களுக்கு குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு உள்ளது. அவர் தமிழ் பட உலகின் இளைய சூப்பர் ஸ்டார்” என்றார்.

நடிகர் எஸ்.வி.சேகர் பேசும்போது “சிவகார்த்திகேயனை இளைய சூப்பர் ஸ்டார் என்று கூறுவதால் ரஜினிகாந்த் கோபித்துக்கொள்ள மாட்டார். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் சிவகார்த்திகேயன் வளர்ந்து இருக்கிறார்” என்றார். தொடர்ந்து பேசிய பலரும் சிவகார்த்திகேயனை இளைய சூப்பர் ஸ்டார் என்றே அழைத்தனர்.

இதற்கு பதில் அளித்து சிவகார்த்திகேயன் பேசியதாவது, “எனக்கு எந்த பட்டமும் வேண்டாம். பட்டங்களில் எனக்கு விருப்பம் இல்லை. பட்டங்கள் பெயரை வாயால் சொல்வதற்கு கூட நான் தயாராக இல்லை. தயவு செய்து எனக்கு பட்டப் பெயர் சூட்டி அழைக்க வேண்டாம். கடைசிவரை மக்களுக்கு பிடித்த மாதிரி நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசையாக இருக்கிறது. எனது நடிப்பு பற்றி விமர்சனங்கள் வரும்போது திருத்திக்கொள்வேன். எனது வாழ்க்கை எப்படி இருந்தது. இந்த இடத்துக்கு எப்படி வந்தேன் என்பதையெல்லாம் மனதில் வைத்து இருக்கிறேன். எனக்கு என்று ஒரு பாதை வைத்துக்கொண்டு அதில் எனக்கு கொடுத்த வேலையை செய்கிறேன். அது போதும்.

சினிமாவில் பொதுவாக 30, 40 வயதுவரைதான் வலுவாக காலூன்றி நிற்க முடியும். ஆனால் தம்பிராமையா அந்த வயதையும் தாண்டி நிறைய படங்களில் நடித்து வருவதற்கு அவரது விடா முயற்சியும், உழைப்பும்தான் காரணம். சினிமா துறையில் சுய ஒழுக்கத்தோடு இருந்தால் முன்னேறலாம். ‘மனம் கொத்தி பறவை’ படத்தில் எனக்கு நடனம் வரவில்லை. ‘பாடல் நன்றாகத்தானே இருக்கிறது நீ ஏன் நடனம் என்ற பெயரில் உடற்பயிற்சி செய்கிறாய்’ என்று கேலி செய்தனர். இப்போது ஓரளவு நடனம் ஆட கற்று இருக்கிறேன்”. இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.