வெடிவிபத்து ஏற்பட்ட கொல்லம் புட்டிங்கல் அம்மன் கோவில் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது.

KollamPooram_Mainகேரளாவில் வெடிவிபத்து ஏற்பட்ட புட்டிங்கல் அம்மன் கோவில் மீண்டும் தரிசனத்திற்கு திறக்கப்பட்டது.கேரள மாநிலம், கொல்லம் அருகே பரவூர் என்னும் இடத்தில் புட்டிங்கல் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வழக்கம் போல் இவ்வருடமும் வருடாந்திர திருவிழா நடந்து வந்தது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு வந்தனர். வருடாந்திர திருவிழாவின் ஒரு பகுதியாக கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி தொடங்கியது. கடந்த 10-ம் தேதி அதிகாலை 3.30 மணி அளவில் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட வாணவேடிக்கையின்போது சக்தி வாய்ந்த பட்டாசுகள் வெடித்து சிதறி அருகில் இருந்த, கோவிலின் பொருட்கள் வைப்பு அறைகளுக்குள் விழுந்தன.அங்கு ஏற்கனவே வாணவேடிக்கை நடத்துவதற்காக பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. வெடித்து சிதறிய தீப்பொறிகள் அந்த பட்டாசுகள் மீது விழுந்தது. இதைத்தொடர்ந்து அந்த அறையில் வைக்கப்பட்டு இருந்த பட்டாசுகள், வெடிபொருட்கள் காதுகள் செவிடாகும் அளவிற்கு பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதனால் அந்த கட்டிடம் அடியோடு இடிந்து தரைமட்டமானது. இடி இடித்தது போன்ற இந்த வெடி சத்தம் 2 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ளவர்களுக்கும் தெளிவாக கேட்டது.வாணவேடிக்கையின்போது ஏற்பட்ட வெடி விபத்தில் 108 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். 350–க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 7 நாட்களுக்கு பின்னர் இன்று காலை 4 மணியளவில் உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி கோவிலை திறந்தார். அப்பகுதியை சேர்ந்த மக்கள் வரிசையாக நின்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையே திருச்சூர் பூரம் திருவிழா பலத்த பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கியது.