விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட் 4 வாரம் நிறுத்தி வைப்பு: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

Profile Of  Chairman UB Group And Kingfisher Airlines Vijay Mallya

விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைத்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது.பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, பல்வேறு பொதுத்துறை வங்கிகள் உள்பட 18 வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கிவிட்டு அதைச் திருப்பிச் செலுத்தவில்லை. வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அவர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் 2-ந்தேதி அவர் இங்கிலாந்துக்கு சென்று விட்டார். சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கதுறையும் விஜய் மல்லையாவின் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக விசாரணைக்கு, மும்பையில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி 3 முறை அவருக்கு அமலாக்கத்துறை சம்மனும் அனுப்பியது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. டெல்லி மேல்-சபை எம்.பி.யான அவர் சிறப்பு பாஸ்போர்ட் மூலம் இங்கிலாந்து சென்று விட்டது, தெரிய வந்தது. இதையடுத்து விஜய்மல்லையாவின் பாஸ்போர்ட்டை திரும்பப் பெறுமாறு அமலாக்கத்துறை மத்திய வெளியுறவு அமைச்சகத்தை அண்மையில் கேட்டுக் கொண்டது. இதனால், விஜய் மல்லையாவின் சிறப்பு பாஸ்போர்ட் செயல்பாட்டை 4 வாரத்துக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்து மத்திய அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. ‘இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக மத்திய வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் விகாஸ் சுவரூப் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, ‘‘மத்திய அரசின் நடவடிக்கை குறித்து ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்கும்படி விஜய்மல்லையா கேட்டுக் கொள்ளப்பட்டு இருக்கிறார். அதற்குள் பதில் அளிக்காவிட்டால், மத்திய வெளியுறவு அமைச்சகம் அவருடைய பாஸ்போர்ட்டை நிரந்தரமாக திரும்பப் பெறும் நடவடிக்கையில் இறங்கும்’’ என்றார். விஜய்மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டால் இதுபற்றி இங்கிலாந்துக்கு மத்திய அரசு தெரிவித்து அவரை நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கும்படி இந்தியாவால் கோரிக்கை விடுக்க முடியும்.இதற்கிடையே, மும்பையில் உள்ள சட்டவிரோத பணபரிவர்த்தனை தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில், விஜய் மல்லையாவை ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் கைது செய்யக்கோரும் பிடிவாரண்டை பிறப்பிக்கும்படி அமலாக்கத்துறை நேற்று மனுதாக்கல் செய்தது. இந்த மனு இன்று(சனிக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.