தேசிய விருதுகளில் ‘அமரன்’ கம்பீரம்… 3 தேசிய விருதுகளால் பெருமை சேர்த்த படக்குழு

72-வது தேசிய திரைப்பட விருதுகளில், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், சோனி பிக்சர்ஸ் மற்றும் டர்மெரிக் மீடியா இணைந்து தயாரித்த ‘அமரன்’ திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்று பெருமை சேர்த்துள்ளது.

இந்தப் படம் பின்வரும் பிரிவுகளில் தேசிய விருதுகளை வென்றுள்ளது:

சிறந்த இயக்குநர் – ராஜ்குமார் பெரியசாமி

சிறந்த பின்னணி இசை – ஜி.வி. பிரகாஷ் குமார்

சிறந்த படத்தொகுப்பாளர் – ஆர். கலைவாணன்

அசோகச் சக்ரா விருது பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், வீரம், தியாகம் மற்றும் உணர்வுபூர்வமான கதைக்களத்தால் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது.

இந்த வெற்றியை முன்னிட்டு நடிகரும் தயாரிப்பாளருமான கமல் ஹாசன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், படத்தொகுப்பாளர் ஆர். கலைவாணன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவியின் நடிப்பும் விருதுகளைத் தாண்டிய சிறப்புடையது என பாராட்டினார். மேலும், மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் படமாக அமரன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தயாரிப்பாளர் ஆர். மகேந்திரன், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதை தன்னை ஆழமாக பாதித்ததாகவும், ஒவ்வொரு இந்தியரும் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைக் கதையாக அதை திரைப்படமாக உருவாக்கியதில் பெருமை இருப்பதாகவும் தெரிவித்தார்.

மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ள ‘அமரன்’, தரமான இந்திய சினிமாவுக்கான மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.