ஜப்பான் நிலநடுக்கத்தில் 9 பேர் பலி – அணு உலைகளுக்கு ஆபத்தா?

japan

ஜப்பான் நாட்டின் தென்மேற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு 9 பேர் பலியாகியுள்ளனர்.
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் உள்ள கயூஷ் தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 9.26 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது கயூஷில் தீவில் உள்ள குமாமோட்டோ நகரின் கிழக்கே பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டபோது ஜப்பானில் அதிவேகமான இயக்கப்படும் ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. நிலநடுக்கத்துக்கு பின்னர் சுமார் நூறுமுறை நில அதிர்வு ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த நிலநடுக்கத்தால் சில கட்டிடங்கள் மற்றும் வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்க பேரிடர் மீட்பு படையினர் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சில கட்டிடங்களில் தீப்பிடித்து எரிந்தன. 700-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபட்டு உள்ளனர். சுமார் 44 ஆயிரம் பேர் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.நிலநடுக்கம் காரணமாக கட்டிடம் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் சிக்கி 9 பேர் பலியாகினர். 650-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பூகம்பத்தால் குமட்டோ பகுதியில் உள்ள 16 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதிகளில் உள்ள 38 ஆயிரம் வீடுகளுக்கு சமையல் கியாஸ் இணைப்பும் நிறுத்தப்பட்டது.நிலநடுக்கத்தை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள் முகாம்கள் அமைக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டனர். நிலநடுக்கம் மையம் கொண்ட கயூஷ் தீவு மற்றும் அருகில் உள்ள ஷிகாகோ பகுதியில் 3 அணுமின் நிலையங்கள் உள்ளன. நிலநடுக்கத்தினால் அந்த அணுமின் நிலையங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அணு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்து உள்ளது.கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவின் வடகிழக்கு கடல் பகுதியில் 9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் ஒரு அணுமின் உலையில் பாதிப்பு ஏற்பட்டதும், நிலநடுக்கத்தின் விளைவாக சுமார் 20 ஆயிரம் பேர் பலியானதும் நினைவிருக்கலாம்.