சேலத்தில் தி.மு.க.வினர் இடையே கடுமையான மோதல்

vtv_logo

சேலத்தில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியின் போது தி.மு.க.வினரிடையே மோதல் ஏற்பட்டது.சேலம் மத்திய மாவட்டத்துக்கு உள்பட்ட தி.மு.க. வேட்பாளர்கள் வழக்குரைஞர் ராஜேந்திரன் (சேலம் வடக்கு), பன்னீர்செல்வம் (சேலம் மேற்கு), குணசேகரன் (சேலம் தெற்கு), அம்மாசி (ஓமலூர்) ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது நூற்றுக்கணக்கான தி.மு.க.வினர் திரண்டிருந்தனர். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலினை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.அப்போது, முன்னாள் அமைச்சர் வீரபாண்டி எஸ்.ஆறுமுகத்தின் ஆதரவாளரான அழகாபுரம் பகுதி முன்னாள் செயலர் ஜெயவேல், வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரைச் சொல்ல மறந்தது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும், வீரபாண்டி ஆறுமுகத்தின் பெயரைச் சொல்லவில்லை என்றால் யாரும் வெற்றி பெற முடியாது என்றார்.இதையடுத்து அங்கு கூடியிருந்த மற்றொரு தரப்பினர் முழக்கம் எழுப்பிய நபரைத் தாக்கினர். அப்போது அங்கிருந்த சேலம் நகரக் காவல் ஆய்வாளர் குமரேசன் தலையிட்டு சமரசத்தில் ஈடுபட்டார்.மேலும், தி.மு.க. வேட்பாளர்களும் தொண்டர்களிடம் சமரசத்தில் ஈடுபட்டனர். இதனால் நிலைமை கட்டுக்குள் வந்தது. சிறிது நேரத்தில் திமுகவினர் கலைந்து சென்றனர்.இந்தச் சம்பவத்தில் முன்னாள் பகுதி செயலர் ஜெயவேல் மற்றும் அழகாபுரம் பகுதி செயலர் குமரவேல் ஆகியோருக்கு லேசான காயம் ஏற்பட்டது.இந்த மோதல் சம்பவம் காரணமாக பழைய பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.