சுனாமி பேரலையின் 13-வது ஆண்டு நினைவு தினம்

2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி உருவான சுனாமியால் ஏற்பட்ட தாக்கம் 13 ஆண்டுகள் கடந்தும் இன்றும் நெஞ்சில் நீங்கா வடுவாக உள்ளது.கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டங்கள் முடிந்து மக்கள் அமைதியாக உறங்கிக் கொண்டிருந்த இரவு, இந்திய பெருங்கடல் பகுதியில் சுமத்ரா தீவுகள் அருகே இரவு 12:58 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.1 முதல் 9.3-ஆக பதிவான இந்த நிலநடுக்கம் சுமார் 10 நிமிடங்கள் வரை நீடித்தது. நிலநடுக்கத்தின் காரணமாக, நிலத்திற்கு அடியில் உள்ள நிலத்தட்டுகள் நகர்ந்து கடல் நீர் உள்வாங்கியது. உள்வாங்கிய சிறிது நேரத்திலேயே அதிக அழுத்தம் மற்றும் வேகத்துடன் மீண்டும் வெளித்தள்ளப்பட்ட நீரானது பல அடி உயரத்திற்கு ஆழி பேரலையாக மேழெழுந்தது.இந்தோனேஷியா, தாய்லாந்து, மாலத்தீவுகள், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் இந்த பேரலையின் வேகத்தில் சிக்கி சின்னாபின்னமாகின. அந்த காலகட்டத்தில் இந்திய பெருங்கடல் பகுதியில் சுனாமி எச்சரிக்கை கருவிகள் பொருத்தபடவில்லை.

அதனால் சுனாமி குறித்து மக்களுக்கு எச்சரிக்கை ஏதும் விடப்பவில்லை. ஆனால் மத்திய அரசுக்கு இது குறித்து தகவல் அனுப்பப்படும், அரசு மெத்தன போக்காக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டும் உண்டு. சுமத்ரா தீவுகளை தாக்கி வெகு நேரத்திற்கு பின்னரே சுனாமி அலைகள் இந்தியாவை தாக்கின. குறிப்பாக தமிழக கடலோர மாவட்டங்களை தாக்கிய இந்திய பேரலையில் சிக்கி ஆயிர கணக்கான மக்கள் உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என பலரும் இந்த பேரலையின் கோர தாண்டவத்திற்கு பலியாகினர்.திருவள்ளூர், சென்னை துவங்கி தெற்கே கன்னியாகுமரி வரை கடல் பேரலைகளுடன் கொந்தளித்துக் கொண்டிருந்தது.  இந்த இயற்கை பேரழிவில் தமிழகத்தில் பல்லாயிர கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்தனர். பல லட்ச கணக்கானோர் உறவுகளையும், உடமைகளையும் இழந்து அனாதைகள் ஆகினர். இந்த சம்பவம் முடிந்து இன்றோடு 13 ஆண்டுகள் ஆக போகிறது. ஆனால் இன்றளவும் அதன் தாக்கம் மக்கள் மனதில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இன்று பல்வேறு கடற்கரை கிராமங்களை சேர்ந்தவர்களும் சுனாமியில் உயிரிழந்த தங்கள் சொந்தங்களுக்காக பால் குடம் எடுத்து வந்து கடலில் ஊற்றி அஞ்சலி செலுத்துவர்.