ஏன் என்னை ஏதோ செய்தாய் – திரைப்பட விமர்சனம்

காதலுக்கு பல முகங்கள் இருக்கின்றன. சில காதல்கள் எதிர்பாராமல் தொடங்கும்; சில உறவுகள் ஆரம்பத்தில் ஒரு காரணத்திற்காக உருவாகி, பின்னர் மனதின் ஆழத்தில் வேறொரு உணர்வாக மாறும். அப்படியொரு எதிர்பாராத உறவு எப்படி காதலாக மாறுகிறது என்பதைக் கவிதை போன்ற அணுகுமுறையில் சொல்ல முயற்சித்திருக்கும் திரைப்படம் இது.

கதையின் நாயகன் ஆண்டனி. வாழ்க்கையை பெரிதாக எந்தக் கட்டுப்பாடுகளுக்கும் உட்படுத்தாமல், தனது விருப்பங்களின் அடிப்படையில் வாழ்ந்து வருபவர். ஒரு கட்டத்தில் பாலியல் தொழிலில் இருக்கும் பெண் ஒருவரை தனது வீட்டிற்கு அழைக்கிறார். இருவருக்கும் இடையே உருவாகும் ஒரு இரவு உறவு, அத்துடன் முடிந்துவிடாமல் ஆண்டனியின் மனதில் பல கேள்விகளையும் புதிய உணர்வுகளையும் உருவாக்குகிறது.

அந்தப் பெண்ணிடம் தான் முதலில் எதிர்பார்த்ததைத் தாண்டி ஏதோ ஒன்று இருப்பதாக ஆண்டனி உணர்கிறார். அந்த ஈர்ப்பு நாளடைவில் காதலாக மாறுகிறது. ஆரம்பத்தில் தயக்கத்துடன் இருக்கும் அந்தப் பெண்ணும் பின்னர் ஆண்டனியின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு காதலில் விழுகிறார். சமூகத்தின் பார்வைகள், இருவரின் கடந்த காலம் என பல தடைகளைக் கடந்து இவர்களது உறவு எந்த இடத்தை அடைகிறது என்பதே படத்தின் கதை.

நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி, கதாபாத்திரத்தின் உடல்மொழி மற்றும் பேச்சு வழக்கில் ஒரு குறிப்பிட்ட பாணியைப் பின்பற்றியிருக்கிறார். சில காட்சிகளில் அவரது நடிப்பு கவுதம் மேனன் திரைப்படங்களின் நாயகர்களை நினைவுபடுத்தினாலும், படம் நகர நகர அவரது இயல்பான பாணியாக அது நமக்குப் பழகிவிடுகிறது.

நாயகியாக நடித்திருக்கும் மதுமிதா தாஸ், படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒருவராக இருக்கிறார். குறிப்பாக உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரது நடிப்பு கதாபாத்திரத்தின் வலியையும் குழப்பத்தையும் அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. தமிழ்சினிமாவுக்கு ஒரு கவனிக்கத்தக்க வரவு.

ஜீவாரவி, ரெஜின் ரோஸ், நவ்யா சுஜி உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை தேவையான அளவில் சிறப்பாகச் செய்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் பைட்ரோவில்லணி, படத்தின் குறுகிய களத்தையும் குறைந்த கதாபாத்திரங்களையும் தனது கேமரா மூலம் சுவாரஸ்யமாகக் கையாண்டிருக்கிறார். கதாபாத்திரங்கள் குறைவாக இருந்தாலும், காட்சிகளின் ஃப்ரேமிங் மற்றும் ஷாட் கம்போசிஷன் மூலம் அந்தக் குறை தெரியாமல் பார்த்துக்கொண்டுள்ளார்.

ஜாய்கர் இசையில் கவனம் ஈர்க்கிறார். பாடல்கள் கதையின் மனநிலைக்கு பொருந்துவதுடன், பின்னணி இசையும் காட்சிகளின் உணர்வை வலுப்படுத்துகிறது.

இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, நாயகனாகவும் நடித்திருக்கும் ஆண்டனி, கதையை மிகப்பெரிய சம்பவங்களின் வழியாக நகர்த்தாமல், மனிதர்களின் உணர்வுகளை மையமாக வைத்து சொல்ல முயற்சித்திருக்கிறார்.

குறிப்பாக பாலியல் தொழிலில் இருக்கும் பெண் கதாபாத்திரத்தை எந்தவிதமான தீர்ப்புகளுக்கும் உட்படுத்தாமல், அவரது வாழ்க்கையையும் உணர்வுகளையும் இயல்பாக அணுகியிருப்பது படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம். ஒரு மனிதரை அவரது தொழிலின் அடிப்படையில் மட்டுமே மதிப்பிடாமல், அவருக்குள் இருக்கும் உணர்வுகளையும் தனிப்பட்ட வாழ்க்கையையும் பார்க்கும் பார்வை எழுத்தில் வெளிப்படுகிறது.

பல காட்சிகளில் பின்னணி ஒலியை குறைத்து, அமைதியையே ஒரு கதையாடல் கருவியாகப் பயன்படுத்தியிருப்பதும் கவனிக்க வைக்கிறது. வசனங்களைவிட மௌனம் சில இடங்களில் அதிகம் பேசுகிறது.

அதேநேரத்தில், படத்தின் கதை மற்றும் களம் சிறிய அளவில் இருப்பதால், திரைக்கதையின் நீளத்தை இன்னும் சுருக்கமாக வைத்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. சில காட்சிகள் நீளமாகத் தோன்றுவதால் படத்தின் வேகம் பாதிக்கப்படுகிறது.

மொத்தத்தில், வழக்கமான காதல் கதைகளில் இருந்து விலகி, எதிர்பாராத சூழலில் உருவாகும் உறவை மையமாக வைத்து மென்மையான உணர்வுகளுடன் பயணிக்கும் ஒரு சினிமாட்டிக் லவ் ஸ்டோரியாக இப்படம் அமைந்துள்ளது. சில குறைகள் இருந்தாலும், கதையை அணுகிய விதமும் கதாபாத்திரங்களைத் தீர்ப்பின்றி கையாண்டிருக்கும் பக்குவமும் படத்திற்கு தனித்துவத்தை அளிக்கிறது.

ரேட்டிங் : 3/5