மெலோடி பாடல் பாட ஆசைப்படும் விக்ரம்

தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஷிபு தமீன் தயாரித்திருக்கும் சாமி ஸ்கொயர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இவ்விழாவில் நடிகர் விக்ரம் பேசுகையில்,

‘சாமி என்னை கமர்சியல் ஹீரோவாக நிலைநிறுத்திய படம். தில், தூள் வரிசையில் அமைந்த மற்றொரு மாஸான படம். இயக்குநர் ஹரியைப் பற்றி சொல்லவேண்டும் என்றால் அவர் ஒரு படத்தை இயக்குவதை தவம் போல் ஒய்வேயில்லாமல் அர்ப்பணிப்புடன் செய்வார்.

கந்தசாமி படத்தில் எல்லா பாடல்களையும் பாட வைத்ததற்கு இயக்குநர் சுசிக்கும், தேவி ஸ்ரீபிரசாத்திற்கும் நன்றி சொல்லவேண்டும். அந்த படத்தில் அந்த ஒரு விசயத்தை நான் புதிதாக செய்திருக்கிறேன். அதே சமயத்தில் மற்ற இசையமைப்பாளர்களை விட தேவி ஸ்ரீபிரசாத் இசையமைப்பில் பாடும் போது, பாடல்வரிகளுக்குள் இருக்கும் எமோஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாடச்சொல்வார். இந்த வரிக்கு காமெடியாக முயற்சிக்கலாமா…? இந்த எமோஷனில் பாடலாமா..? என சொல்வார்.

இந்த படத்தில் நான் பாடிய பாடலில் கூட ஒரு இடத்தில் ‘ஏக்க்க்க்..’ என ஒரு இடத்தில் வரும். அதில் ஒரு எமோஷனை முயற்சித்திருப்போம். இது அவரின் ஸ்பெஷல். ஆனால் எனக்கு மெலோடி பாடல் பாட ஆசை. அடுத்த முறையாவது எனக்கு மெலோடி பாட்டை பாட வாய்ப்பு கொடுக்கவேண்டும்.

இந்த படத்தில் பாபிசிம்ஹா வில்லனாக நடித்திருக்கிறார். இந்த படத்தில் நடிப்பதற்காக வேறு எந்த படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளாமல் உடலை ஏற்றி இறக்கி நடித்திருக்கிறார். இந்த படம் அவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமையும். ஒரு சிக்கலான சூழலில் ‘இருமுகன் ’ படத்திற்கு கைகொடுத்து ஒத்துழைப்புக் கொடுத்தார் தயாரிப்பாளர் ஷிபு. அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவது சந்தோஷம்.’ என்றார்.