ரன் அடிக்காவிடில் அணியில் இடம் கிடையாது டுமினிக்கு எச்சரிக்கை

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. போட்டி நான்கு நாட்களிலேயே முடிவடைந்தது. தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டு பிளிசிஸ், தனது மனைவிக்கு குழந்தை பிறந்ததால் முதல் டெஸ்டில் பங்கேற்கவில்லை.

அவர் 2-வது டெஸ்டில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்ஆப்பிரிக்க அணியில் ஜே.பி. டுமினி இடம்பிடித்திருந்தார். அவர் முதல் இன்னிங்சில் 15 ரன்னும், 2-வது இன்னிங்சில் 2 ரன்களும் மட்டுமே எடுத்தார். டுமினி கடந்த 8 இன்னிங்சில் 40 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டுமினியின் மோசமான ஆட்டம் தென்ஆப்பிரிக்காவிற்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. சரியாக விளையாடாவிடில் அணியில் இடமிருக்காது என்று டு பிளிசிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டுமினியின் மோசமான ஆட்டம் குறித்து டு பிளிசிஸ் கூறுகையில் “அணிக்கு ஒரு வீரரின் ரன்கள் தேவை என்பதை சொல்லக்கூடிய முதல் வீரராக டுமினி உள்ளார். மற்ற வீரர்ளுக்கும் இதிலிருந்து மாற்றமில்லை. டுமினி களமிறங்கும் இடத்தில் அவர் தகுதியானவர்தான். சிறப்பாக ஆடவே விரும்பினார். அணிக்காக மைதானம் இறங்கி சிறப்பான ரன்கள் அடிக்க வேண்டும் என்றுதான் ஒவ்வொருவரும் விரும்புவார்கள். ஆனால், கடைசி நாளில் ரன்கள் எடுத்திருக்க வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்” என்றார்.