எல்லா நாளும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சிறப்பாக அமைந்து விடாது – விராட் கோலி

இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடக்கும் ஒருநாள் தொடரை ஏற்கனவே இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வென்றிருந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற நான்காவது ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியதாவது, “முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் 30 ஓவர்களில் சிறப்பாக விளையாடியது. ஆஸ்திரேலிய அணியை 350 ரன்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என நினைத்தோம். அதன்படி 334 ரன்களுக்கு கட்டுப்படுத்தி விட்டோம். பின்னர் ஆட்டத்தை தொடங்கிய எங்கள் அணி சிறப்பாகவே விளையாடியது. ரோஹித் சர்மா மற்றும் ரஹானே இணைந்து சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தொடர்ந்து பெரிதாக பார்ட்னர்ஷிப் எதுவும் சரியாக அமையாததால் இந்திய அணி தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

ஆஸ்திரேலியாவும் மிக சிறப்பாக பந்து வீசியதால் ஹர்டிக் பாண்ட்யா- கேதர் ஜாதவ் ஜோடியும் தொடர்ந்து ஈடுகொடுக்க முடியவில்லை. ஆஸ்திரேலிய அணிக்கு சிறந்த நாளாக இருந்ததால் வெற்றி பெற்றது. இந்திய அணி சிறப்பாக விளையாடவில்லை என கூற முடியாது. இந்திய அணியின் உமேஷ் யாதவ் மற்றும் ஷமி சிறப்பாக பந்து வீசினார்கள். சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எல்லா நாளும் சிறப்பாக அமைந்து விடாது” என்றார்.