விஜய் மல்லையா கடன் மோசடி வழக்கில் ஐடிபிஐ வங்கி, கிங்பிஷர் அதிகாரிகள் 8 பேர் கைது

தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கினார். ஆனால் கடனை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி ஓடிவிட்டார். இதனிடையே ஜி.எம்.ஆர். ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்துக்கு பணம் செலுத்த வேண்டிய வழக்கில் ஹைதராபாத் நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து இருந்தது. அத்துடன் செக் மோசடி வழக்கிலும் ஹைதராபாத் நீதிமன்றம் விஜய் மல்லையாவுக்கு எதிராக 5 பிடிவாரண்ட்டுகளை பிறப்பித்திருக்கிறது. இந்நிலையில், மல்லையா கடன் மோசடி வழக்கில், ஐடிபிஐ வங்கி, கிங்பிஷர் நிறுவன அதிகாரிகள் 8 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. இதில் ஐடிபிஐ வங்கியின் முன்னாள் சேர்மன் மற்றும் அதன் முன்னாள் அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கிங்பிஷர் நிறுவனத்தின் அதிகாரிகள் 4 பேர் கைதாகியுள்ளனர். பெங்களூரில் உள்ள மல்லையாவின் இல்லம் உட்பட 11 இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக, ஐடிபிஐ வங்கியில் வாங்கிய ரூ.900 கோடி கடனை திருப்பிச் செலுத்தாதது தொடர்பான வழக்கில், அந்த வங்கி மற்றும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் உயரதிகாரிகளுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.