ஜெயகாந்தன் அடித்தட்டு மக்களின் வேர்வை – இரத்தம் – கண்ணீர் என்ற பிசுக்கோடு சிறுகதை செய்தவர் – கவிஞர் வைரமுத்து

ஜெயகாந்தன், அடித்தட்டு மக்களின் வேர்வை – இரத்தம் – கண்ணீர் என்ற பிசுக்கோடு சிறுகதை செய்தவர் – கவிஞர் வைரமுத்து

தமிழாற்றுப்படை வரிசையில் 17ஆம் ஆளுமையாக ஜெயகாந்தன் குறித்த கட்டுரையைக் கவிஞர் வைரமுத்து நேற்று அரங்கேற்றினார். விழாவுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தலைமை தாங்கினார். எழுத்தாளர்களும் பொதுமக்களும் பெரும் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவில் கவிஞர் ஆற்றிய முன்னுரை இது.

சிறுகதை என்ற கலைவடிவத்தை அமெரிக்காவின் எட்கர் ஆலன்போ வடிவமைத்தார். பிராண்டர் மேத்யூஸ் அதன் ஓரஞ்சாரங்களை ஒழுங்கு செய்தார். அந்த அமெரிக்க – ஐரோப்பிய இலக்கிய வடிவத்தை அழகு செய்து தமிழுக்குப் பெரிதும் கொண்டு வந்தவர் புதுமைப்பித்தன். தமிழர்க்குப் பெரிதும் கொண்டு சேர்த்தவர் ஜெயகாந்தன்.

மத்திய தர வர்க்கத்தின் மொழிஅலங்காரமாய் இருந்த சிறுகதையை அடித்தட்டு மக்களின் வேர்வை – இரத்தம் – கண்ணீர் என்ற பிசுக்கோடு சிறுகதை செய்தவர் ஜெயகாந்தன். ஓர் எழுத்தாளனுக்குரிய கட்டற்ற சுதந்திரத்தை அவர் பெற்றிருந்தார். அவர் வாழ்ந்த சமூகம் அவரது எழுத்தையும் சுகித்துக்கொண்டது. அவரையும் சகித்துக்கொண்டது. மனித குலத்தின் முற்போக்குச் சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டைபோடும் முரண்பட்ட மரபுகளையும் உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்களையும் தர்மங்களையும் உடைத்தெறிவதற்கான உக்கிரத்தை அவர் எழுத்து கொண்டிருந்தது. அந்தக் கருத்து வெளிப்பாட்டுக்கான உரிமைகளைக் காலம் அவருக்குத் தந்திருந்தது. இந்தியச் சமூகத்தில் இப்போது அந்தச் சுதந்திரம் இருக்கிறதா என்பதை சர்வதேச சமூகம் தன் கண்களை நெற்றிக்கு உயர்த்தி கவனித்துக்கொண்டிருக்கிறது.

பேச்சு – எழுத்து – செயல் என்ற போராட்ட வடிவங்களால்தான் இந்தச் சமூகம் சமநிலை பெறுகிறது. “ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை. இல்லை போராட்டமே வாழ்க்கை” என்று மனிதன் படத்தில் ஏற்கெனவே எழுதியிருக்கிறேன். சதுரமான முட்டைபோடும் பறவை ஏதும் இல்லை. சமநிலையை அடைந்துவிட்ட சமூகம் ஏதுமில்லை. அந்தச் சமநிலையை அடைவதற்கான போராட்டம்தான் மனிதர்களின் வற்றாத வரலாறு. கருத்துரிமை வெல்லப்படுவதும் கருத்துரிமை கோருகிறவன்
கொல்லப்படுவதும் நல்ல சமூகத்தின் அடையாளங்கள் அல்ல.

கருத்துரிமைப் போராளிகளான பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கெளரி லங்கேஷ் போன்றோர் கொல்லப்பட்டிருப்பதும், மலையாள எழுத்தாளர் பஷீர் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன் போன்றோர் ஒடுக்கப்பட்டிருப்பதும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை அல்ல. சமய நம்பிக்கை, பேச்சுச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரம், அமைதியான மக்கள் போராட்டம் ஆகியவற்றுக்கு எதிராகச் சட்டம் இயற்றவே முடியாது என்பதுதான் அமெரிக்காவின் அரசமைப்பு. குடிசார் மற்றும் அரசியல் உரிமைக்கான அனைத்துலக உடன்படிக்கையும் இதையே உறுதிப்படுத்துகிறது. முற்போக்கு
இல்லாத தேசத்திற்கு முன்னங்கால்கள் இல்லை.

கோள்களின் குடும்பத்தில் சூரியன் மையத்தில் இருக்கிறது. கோள்கள் அதைச்சுற்றி வருகின்றன என்ற உண்மையைக் கண்டறிந்தவர் கலீலியோ. ஆனால் அந்த உண்மையைச் சொல்லும் கருத்துரிமை மறுக்கப்பட்ட கலீலியோ, இறக்கும்வரை வீட்டுச் சிறையில் இருக்குமாறு தண்டிக்கப்பட்டார். ஆனால் மறுக்கப்பட்ட அந்தக் கருத்து வெளிப்பட்ட பிறகுதான் மனிதகுலம் வானத்தை நோக்கிப் பாய ஆரம்பித்தது.

இன்று சகிப்புத்தன்மை குறைந்திருப்பதை நினைத்தால் நெஞ்சில் இரத்தம் கட்டுகிறது. பெரியார் இன்றிருந்தால் எத்தனைமுறை சுடப்பட்டிருப்பார்? ராஜாராம் மோகன்ராய் இன்றிருந்தால் தூக்குக் கயிறு அவர் கழுத்தை எத்தனை முறை இறுக்கி இருக்கும்? ராமானுஜர் இன்றிருந்தால் எத்தனை அமைப்புகள் அவரை ஏற்றுக்கொண்டிருக்கும்? ஜெயகாந்தன் இன்றிருந்தால் எத்தனை முறை குண்டர் சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருப்பார்? பன்முகத்தன்மைதான் இந்தியாவின் வலிமை; கருத்துச் சுதந்திரம்தான் அதன் பெருமை. அரசியலைப் படைப்புகள் தடுக்கலாம்; ஆனால் படைப்புகளை அரசியல் தடுக்கக்கூடாது.

ஜெயகாந்தன் இலக்கியம் – சமூகம் இரண்டையும் முன்னெடுத்துச் சென்ற முன்னோடிப் படைப்பாளி. செவ்வாய்க்கிழமையைத் தாண்டாமல் புதன்கிழமை இல்லை. ஜெயகாந்தனைத் தாண்டாமல் சிறுகதைகள் இல்லை.