சென்னையில் விபத்துக்களைக் குறைக்க, காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் அறிவுரையின் பேரில், போக்குவரத்து விழிப்புணர்வு வாரம் இன்று முதல் தொடங்கியுள்ளது. ஹெல்மெட் அணியாமல் பயணிப்பது, மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவது, இருசக்கர வாகனத்தில் இருவருக்கும் மேற்பட்டோர் பயணிப்பது, செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறினால் ஏற்படும் விளைவுகள் குறித்து வாகன ஓட்டிகளிடம் போலீசார் விளக்கிக் கூறினர்.
ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் விபத்துக்களின்போது தலையில் சிறிதளவில் அடிபட்டாலும் உயிரிழப்பு ஏற்படுவது குறித்து போலீசார் எடுத்துரைத்தனர். சென்னை வட பழனியில் தெற்கு போக்குவரத்து சரகம் சார்பில் நடத்தப்பட்ட விழிப்புணர்வில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களை நிறுத்தி போலீசார் இலவச ஹெல்மெட் வழங்கினர். வடபழனி போக்குவரத்துக் ஆய்வாளர் குமரேசன் ஹெல்மெட் இல்லாத 10 பேருக்கு தனது சொந்த செலவில் ஹெல்மெட் வாங்கிக் கொடுத்தார்.