கோவில்பட்டி அருகேயுள்ள எட்டயபுரம் ஆதி திராவிட தெருவைச் சேர்ந்த முனியசாமி என்பவரது மகன் லெனின்குமார். திமுகவில் உறுப்பினராக இருக்கும் இவர் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருவது மட்டுமின்றி, ஒரு மாத இதழ் செய்தியாளராகவும் பணியாற்றி வருகின்றார்.லெனின்குமார் அவர்கள் பகுதி மக்களின் பிரச்சினைகளுக்காக சிலபோராட்டங்களை நடத்தி வருவதாகவும், இதனை பொறுத்து கொள்ள முடியாமல் எட்டயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ராமையாபாண்டியன் மற்றும் சில காவலர்கள் வேண்டும் என்று பொய் வழக்குகள் போடுவது மட்டுமின்றி, தொடர்ந்து மிரட்டல் விடுத்துவருவதாகவும், இது குறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் அளித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை என்று கூறி லெனின்குமார் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மண்ணெணெயை ஊற்றி காவல்துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு தீக்குளிக்கு முயன்றார். இதனை பார்த்த காவல்துறையினரும், கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்களும் அவரை காப்பாற்றி அருகில் இருந்த தண்ணீரை ஊற்றினர். மேலும் அவரது புகாரை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் விசாரணைக்காக லெனின்குமாரை கிழக்கு காவல் நிலைய போலீசார் அழைத்துச்சென்றுள்ளனர்.