கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் இன்று காலைவரை விடிய, விடிய கனமழை பெய்தது. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் தண்டியாக்குப்பத்தில் தொடர் மழையால் ராதா (வயது 65) என்பவரது குடிசை வீட்டின் மீது அருகிலிருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், ராதா(65), புஷ்பா(35), வசந்தகுமார் (16), பகவதி (எ) சந்துரு (13), முல்லை (8) ஆகிய 5 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர். அக்கம்பக்கத்தினர் உடனடியாக கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலையத்துக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் ராதா உள்பட 5 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களது உடல்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் கதிரவன், எஸ்.பி.மகேஷ் குமார், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் வந்தனர். வீட்டு சுவர் இடிந்து விழுந்து பலியான வசந்த குமார், பகவதி மற்றும் முல்லை ஆகியோரின் தந்தை வெங்கடசாமி ஏற்கனவே இறந்து விட்டார். வெங்கடசாமியின் மனைவி ஜெயந்தி தாய் வீட்டுக்குச் சென்றிருந்த நிலையில் இந்த துக்க சம்பவம் நடந்துள்ளது. மனமுடைந்த ஜெயந்தி மற்றும் பிற உறவுகளுக்கும் அதிகாரிகள் ஆறுதல் கூறிச் சென்றனர்.