நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் உச்சநீதிமன்றம் தடை

அரியலூர் மாணவி அனிதா கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாணவர் அமைப்பினர், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தை தொடங்கினர். பல்வேறு அரசியல் கட்சிகளும் போராடிய நிலையில் மாணவர்களின் போராட்டம் ஒருவாரமாக நீடித்து வருகிறது.இதனிடையே அனிதா மரணத்திற்கு நீதி கோரியும், நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு தடைகோரியும் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். மேலும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைமறியல், கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவோர்களை எந்ததெந்த சட்டங்களை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்க முடியுமோ, அந்தவகையில் நடவடிக்கை எடுக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு, சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் என அறிவுறுத்தியுள்ள நீதிமன்றம், நீட் தேர்விற்கு எதிராக போராடுவது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது. இதனயைடுத்து வழக்கு விசாரணை வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.