இலங்கை அணி வெற்றி பெற 550 ரன்கள் இலக்கு

காலேவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 600 ரன்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இலங்கை அணி, 291 ரன்களில் ஆட்டமிழந்தது. 309 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், இலங்கைக்கு ஃபாலோ ஆன் தராமல், இரண்டாவது இன்னிங்சை இந்தியா தொடங்கியது. சிறப்பான தொடக்கத்தால் நேற்று மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் விராட் கோலி 76 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி சதம் அடித்தார்.3 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்திருந்த போது, கேப்டன் விராட் கோலி டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். விராட் கோலி 103 ரன்களுடனும், ரஹானே 23 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முன்னிலை ரன்களையும் சேர்த்து இலங்கைக்கு 550 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒன்றரை நாட்கள் ஆட்டம் மீதம் உள்ள நிலையில் மிகப்பெரிய இலக்கை எட்ட இலங்கை போராட நேரிடும் என்பதால் இந்தியாவுக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று கருதப்படுகிறது.