டெங்கு காய்ச்சலை ஒழிக்க பொதுமக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் – முதல்வர் பழனிசாமி 

டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவி வரும் நிலையில் உரிய நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். அரசுடன் இணைந்து பல்வேறு சமூக அமைப்பினரும் டெங்குவை ஒழிக்கும் பொருட்டு நிலவேம்பு குடிநீர் வழங்கி வருகின்றனர். இதைத்தொடர்ந்து மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வாட்ஸ் ஆப் ஆடியோ செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வரின் செய்தியில், “அனைவருக்கும் வணக்கம். டெங்குவிற்கு காரணமான கொசு நல்ல தண்ணீரில்தான் வளருகிறது. இந்த கொசு பகலில்தான் கடிக்கிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஸ் புழுக்கள் வளராமல் தடுக்க, தாங்கள் சேமித்து வைக்கும் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். வீடுகளின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ளவும்.  அரசு மருத்துவமனையில் ரத்த பரிசோதனை கருவிகள் உள்பட அனைத்து வசதிகளும் 24 மணி நேரமும் செயல்படுகிறது. காய்ச்சல் ஏற்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று தக்க சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அரசு எடுக்கும் கொசு ஒழிப்பு நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பை பொதுமக்கள் கொடுக்க வேண்டும். ஏடிஸ் கொசுக்களை ஒழிப்போம். டெங்கு காய்ச்சலை தடுப்போம். நலமான தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.