பெருகி வரும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த, அஸ்ஸாம் அரசு திட்டமிட்டுள்ளது. அஸ்ஸாமில், முதல்வர் சர்பானந்த சோனவால் தலைமையிலான, பா.ஜ.க அரசு அமைந்துள்ளது. இங்கு, மக்கள் தொகை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த, மாநில அரசு ‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள், அரசு வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது’ என, அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்நிலையில், மாநில சுகாதாரம் மற்றும் கல்வித் துறை அமைச்சர், ஹிமந்த பிஸ்வா சர்மா, நேற்று கூறியதாவது, மக்கள் தொகையை கட்டுப்படுத்த வரும் ஏப்ரல் 2018 முதல் புதிய சட்டத்தை அமல்படுத்த மாநில அரசு முயற்சித்து வருகிறது. அதன் அடிப்படையில் ‘இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், அரசுப் பணிகளில் மட்டுமல்ல, அரசின் எந்த சேவையிலும் ஈடுபட முடியாது; கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கும் போட்டியிட முடியாது. அதே சமயம் அரசு பணியில் இருக்கும் போது உயிரிழக்கும் ஊழியரின் குடும்பத்தைச் சேர்ந்தவருக்கு, கருணை அடிப்படையில் வேலை வழங்கும் முறை கைவிடப்படுகிறது. அதற்கு பதில், அந்தக் குடும்பத்துக்கான புதிய பென்ஷன் திட்டம் அமல்படுத்தப்படும் என கூறினார்.