The Mosquito Philosophy  மார்ச் 12, 2021 முதல் உலகளவில் ஒளிபரப்பப்படுகிறது.

The Mosquito Philosophy திரைப்படம் மார்ச் 12 ஆம் தேதி முதல் Cimemapreneur-ல் உலகளவில் ஒளிபரப்பப்படுகிறது. Cimemapreneur என்பது தலைசிறந்த இந்திய சுயாதீன திரைப்படங்களைத் திரையிடும் pay per view (ஒரு திரையிடலுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தி பார்க்கக்கூடிய) OTT தளம் ஆகும்.

இதுவே தமிழ் சினிமாவின் முதல் “Mumble core ” என்னும் வகையறாவை சார்ந்த படம் எனக் கருதப்படுகின்றது. மேலும் “Dog me 95 ” கோட்பாடு இயக்கத்தின் தாக்கம் இப்படத்தில் பெருமளவில் உள்ளது. எழுதப்பட்ட திரைக்கதை வசனம் எதுவுமின்றி வெறும் 6 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட “The Mosquito Philosophy” யில் Retakes என்று ஒரு விஷயம் இல்லவே இல்லை. நடிகர் சூரியாவின் சூரரைப் போற்று மற்றும் நடிகர் விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் ஆகியப்  படங்களுடன் தமிழ் சினிமா போட்டி பிரிவில் 18 வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ‘The Mosquito Philosophy’ திரையிடப்பட்டது.

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் மற்றும் இணை தயாரிப்பாளருமான ஜதின் ஷங்கர் ராஜ், முன்னேற்பாடுகள் எதுவுமின்றி இருக்கும் சூழலையும் சுற்றுப்புற  வெளிச்சங்களையும் மட்டுமே வைத்து இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார்.  மேலும் படத்தின் முதன்மை நடிகர் சுரேஷ் மற்றும் இயக்குநர் ஆகிய இருவரைத் தவிர மற்ற எந்த நடிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் இப்படத்தின் கதை தெரியாது. இவ்வாறு பல்வேறு சுவாரசியமான விஷயங்கள் உள்ளடக்கியது  கொசுவின் தத்துவம்.

ஒரு 40 வயதுமிக்க ஆண் தன் தாயின் விருப்பத்திற்காக 25 வயதுடைய பெண்ணை மணக்கவிருக்கும் செய்தியினை தன் நண்பர்களுக்கு அறிவிக்கிறான். அவனை இச்சமூகம் எப்படி பார்க்கிறது? நண்பர்களுக்கு இடையே நிகழும் கேலி  உரையாடலால் ஓர் உறவின் போக்கையே மாற்ற முடியுமா? வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இருவர் திருமணபந்தத்தில் இணைவதில் இருக்கும் உள்ளார்ந்த பிரச்சினைகள் என்ன? அப்பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொண்டு கடக்க இயலுமா? ஒரு திருமணமானது திட்டமிட்டு முடிவாகும் தருணங்களில் எல்லாம் ஏன் ஒரு பெண்ணானவள் எப்பொழுதும் கடைசியாக காட்டப்படும் காட்சி பொருளாக மட்டுமே   இருக்கிறாள்? இவ்வாறு எளிமையாக காட்சியளிக்கும் கதையின் மூலம்  கொசுவின் தத்துவம் பூதாகாரமான கேள்விகளை நம் முன் வைக்கின்றது.

பெங்களூரில் பணியாற்றி வரும் சுரேஷ் தனது திடீர் திருமணத்திற்கு நண்பர்களுக்கு அழைப்பு விடுக்க  சென்னை வருகிறான். ஒரு நண்பர் வீட்டில் அனைவரும் கூடி மது அருந்துகின்றனர். மது அருந்திக் கொண்டே நண்பர்களுக்கு  இடையே நடக்கும் அந்த நீண்ட உரையாடலில் இச்சமூகத்தின் கண்ணோட்டத்தில் அழகிற்கும் வெளித்தோற்றத்திற்குமான வரையறைகள்; இளமையும் வயோதிகம்; நெருக்கமும் காதலும் போன்ற பல்வேறு நுட்பமான விஷயங்கள் மெல்லமெல்ல அவிழ்கின்றது. தன்னால் சரி தவறு என்று உணரப்பட்டவை எல்லாம் தற்போது நண்பர்களின் அனுபவங்கள் கலந்த பேச்சினால் வேறு பரிமாணத்தில் தெரிகின்றது.

மேலும்   இப்படம் பெண்ணியவாத அடிப்படையில் பெண்கள் கேட்க வேண்டிய கேள்விகளை முன்வைக்கின்றது. உரையாடல்களுக்கு இடையே திருமணம் என்பது பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் மற்றவரின் ரத்தத்தை உறிஞ்சுவதற்கு சமம் என்று நண்பர்களுள் ஒருவர் தன் கருத்தினைத் தெரிவிக்கிறார்.

இப்படம் ஒருவரை  வயதை கொண்டு  எப்படி மதிப்பிடுகிறோம் என்பதை ஆராய்வதோடு மட்டுமல்லாமல் தனிமனித நோக்கங்களையும் செயல்பாடுகளையும் நுட்பமான முறையில் காட்சிப்படுத்துகிறது. இறுதியில் கதாபாத்திரத்தின் காதல் மற்றும் வாழ்க்கைத் தேடல் ‘உண்மை’யை பின்தொடர்ந்து  முற்றும் முரண்பட்டு விடுகின்றது.

விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்ற “லென்ஸ்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் இரண்டாவது படம் தான் “The Mosquito Philosophy”. இவர் தனது முதல் படத்திற்கு “சிறந்த அறிமுக இயக்குநர்” _க்கான கொல்லாபுடி சீனிவாஸ் விருதினை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது Netflix-யில் உலகளவில் லென்ஸ் திரைப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

Netflix -யில் ஓடிக்கொண்டிருக்கும் “ஓடு ராஜா ஓடு” நகைச்சுவை  திரைப்படத்தின் இயக்குநரும் தயாரிப்பாளருமான ஜெதின் ஷங்கர் ராஜ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பாளர் டேனி சார்ல்ஸ் ஆவார். கன்னட திரையுலகை சேர்ந்த ஐயோ ராமா படத்தின் பின்னணி இசை அமைத்துள்ளார் .