மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வு முடிவுகள் வெளியானது
மருத்துவப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு என்பது கடந்த ஆண்டு முதல் நாடு முழுவதும் கட்டயாமாக்கப்பட்டது. கடந்த மே 6ம் தேதி இந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்றது. நாடு முழுவதும் 13 லட்சம் பேரும், தமிழகத்தில் 1.07 லட்சம் மாணவர்களும் தேர்வை எழுதினர். தமிழ் மொழியில் 24,720 பேர் தேர்வு எழுதினர். மேலும் தமிழ் மொழி நீட் தேர்வுத்தாளில் சுமார் 40 எழுத்துப்பிழைகள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
மாணவர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நீட் தேர்வு முடிவுகள் நாளை(ஜூன் 5) வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து இன்று(ஜூன்.4) வெளியாகும் என இன்று காலை தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்று 12.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு முடிவுகளை www.cbseneet.nic.in என்ற இணையதளத்தின் மூலமாக மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். நாடு முழுவதும் தேர்ச்சி பெற்றவர்களில் 720க்கு 691 மதிப்பெண் பெற்று கல்பனா குமாரி என்ற மாணவி நாட்டிலேயே முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
ஓசி பிரிவுக்கு 119 மதிப்பெண்ணும், ஓபிசி பிரிவுக்கு 96 மதிப்பெண்ணும் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. தேர்வு முடிவில் மொத்தமாக 720 மதிப்பெண்களுக்கு பாட வாரியாக மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர், மதிப்பெண்களின் சதவீதம், அகில இந்திய அளவில் ரேங்க், கம்யூனிட்டி ரேங்க் உள்ளிட்ட விபரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் மாநில வாரியாக எந்த ரேங்க் என்பது தேர்வு முடிவில் வெளியாகவில்லை.