வட இந்தியாவில் முதல் முறையாக மணிபூரில் தமிழர்கள் கட்டிய பிரமாண்டமான கோவிலின் குடமுழக்கு விழா சிறப்பாக நடந்தது.
தமிழர்கள் இந்தியாவில் மட்டுமல்லாது, உலக நாடுகள் முழுவதும் பரவி வாழ்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தமிழர்களின் கலை, பண்பாடு, காலாச்சாரம் ஆகியவற்றை பின்பற்றுவதில் ஆர்வம் காட்டுவது வழக்கம். அந்த வயைில் தமிழகத்தில் இருந்து சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு மணிப்பூர் மாநிலத்துக்கு சென்றவர்கள், அங்கு நமது தமிழர்களின் கலைகளை பிரதிபலிக்கும் வகையில் மணிப்பூர் மாநிலம் மோரே நகரில் அங்காள பரமேஸ்வரி முனீஸ்வரர் கோவில் கட்டியுள்ளனர். அதன் குடமுழக்கு விழா கடந்த 1ஆம் தேதி வெகு சிறப்பாக நடந்தது.
இந்த கோவில் கட்டுவதற்கு முக்கிய பங்காற்றிய மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மோரே தமிழ் சங்கத்தின் தலைவர் சேகர் கூறியதாவது:-
நாங்கள் தமிழகத்தில் இருந்து சென்றாலும், எங்களது தமிழ் கலாச்சாரம் மங்காது. வட இந்தியாவில் தமிழிர்களின் கலைகளை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 2- வது பெரிய கோவில் இது. இதன் உயரம் 67 அடி. இந்த கோவிலை மகாபல்லிபுரத்தை சேர்ந்த கலை வடிவமைப்பாளர்கள்தான் திருப்பணிகளை செய்தனர்.
மோரே தமிழ் சங்கத்தின் சார்பில் நிதிகள் திரட்டப்பட்டு கட்டப்பட்டுள்ள இந்த கோவிலின் குடமுழக்கு விழா சிறப்பாக நடைபெற்றது. பர்மா நாட்டின் எல்லை ஓரம் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு கடந்த 50 ஆண்டுகளாக நடக்காமல் இந்த திருப்பணிகளை தமிழ் சங்கம் சார்பில் எடுத்து முடித்து உள்ளோம். இந்த கோவிலுக்கு எல்லாரும் வந்து வழிப்படுவது வழக்கம். அந்த வகையில் மணிப்பூரில் மக்கள் தமிழர்களின் கலைகளையும், கலாச்சாரத்தையும் நேசிக்கிறார்கள் என்பதற்கு இந்த கோவிலே ஒரு சான்று.
குடமுழக்கு விழாவுக்கு தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 10 ஆயிரம் பேர் வந்து கலந்து கொண்டுள்ளனர். அவர்கள் வருகை தந்தது மோரே தமிழர்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. அதுமட்டுமல்லாது, தமிழர்களால் உருவாக்கப்பட்ட இந்த ஆலயத்துக்கு மணிப்பூர் அரசாங்கத்தை சேர்ந்த அமைச்சர்கள் வந்தது எங்களுக்கு சிறப்பாக இருந்தது. இவ்வாறு சேகர் கூறினார்.