[wpdevart_youtube]0i9PV9dBI4E[/wpdevart_youtube]மத்தியப்பிரதேச மாநிலத்தில் பள்ளி மாணவர்களை காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தூக்கி கொண்டு ஓடிய துணிச்சலான போலீஸ்காரருக்கு முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ரூ.50,000 பரிசு வழங்கி கவுரவித்துள்ளார். மத்தியப்பிரதேசம் மாநிலம் சாகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிதோரா கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில் சுமார் 400-க்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அந்த பள்ளி வளாகத்தில் இருந்து உள்ளூர் போலீசாருக்கு சமீபத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பள்ளி மைதானம் அருகில் வெடிகுண்டு இருப்பதாக பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீஸ் ஸ்டேஷனில் இருந்த தலைமை காவலர் அபிஷேக் படேல் உடனே அங்கு விரைந்து சென்றார். பள்ளி மைதான வளாகத்தில் கிடந்த சுமார் 10 கிலோ எடை கொண்ட வெடிகுண்டை கைப்பற்றினார். மாணவர்களின் உயிரை காப்பாற்றும் விதமாக, அந்த வெடிகுண்டை தோளில் தூக்கி வைத்தபடி, அங்கிருந்து ஓட தொடங்கினார். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வெடிகுண்டுடன் ஓடிச் சென்ற அபிஷேக், அதனை அப்புறப்படுத்தி உள்ளார். இதுதொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. விசாரணையில், அந்த வெடிகுண்டு ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டது தெரிய வந்தது.துணிச்சலுடன் மாணவர்களின் உயிரை காப்பாற்றிய தலைமை போலீஸ் காவலருக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். போலீஸ் அதிகாரிகளும் அவரது செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், மாணவர்களின் உயிரை காப்பாற்றிய போலீஸ்காரர் அபிஷேக் படேலுக்கு மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ரூ.50,000 பரிசு வழங்கி கவுரவித்துள்ளார். இதேபோல், மாநில காங்கிரசாரும் அபிஷேக் படேலின் வீரச் செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.