“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமத்துவக் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் மற்றொரு சமூகநீதி திரைப்படம் ‘தி கிராண்ட் மாஸ்டர்’.
தூய்மைப் பணியாளரான அபர்ணதியின் மகன் அஸ்வினுக்கு படிப்பை விட செஸ் விளையாட்டில் அதிக ஆர்வம். அவனுக்குள் இருக்கும் திறமைக்கு சாதி, பொருளாதாரம், சமூக ஏற்றத்தாழ்வு என பல தடைகள் குறுக்கே நிற்கின்றன. செஸ் கற்றுக்கொடுக்க யாரும் இல்லாத நிலையில், மகனின் கனவுக்காக அபர்ணதியே களமிறங்குகிறார். ஆனால் அவருக்கும் செஸ்ஸுக்கும் இருக்கும் தொடர்பு என்ன? அவரது கடந்த காலம் என்ன? அஸ்வினின் கனவு நிறைவேறுகிறதா? என்பதுதான் படத்தின் பயணம்.
அபர்ணதி கதையின் மையக் கதாபாத்திரமாக இருந்து, ஒரு தாயின் அக்கறை, வலி, போராட்டம் என பல்வேறு உணர்வுகளை இயல்பான நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். சிறுவன் அஸ்வினும் கவனிக்க வைக்கும் வகையில் நடித்திருக்கிறார். குறிப்பாக காவல்நிலையத்தில் ஆசிரியருடன் செஸ் விளையாட வேண்டும் என அவர் கேட்கும் காட்சி மனதில் நிற்கிறது.
லிங்கேஷ் தனக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்துள்ளார். வெற்றிச் செழியன், சுரேஷ் மேனன், தமிழரசி, அன்பு உள்ளிட்ட துணை நடிகர்களும் தங்கள் பங்களிப்பை இயல்பாக வழங்கியுள்ளனர்.
தினேஷ் ஆண்டனியின் இசை படத்தின் உணர்வுகளுக்கு துணையாக இருக்கிறது. அர்ஜுன் ரவியின் ஒளிப்பதிவு கதையின் சூழலையும் கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் அழகாக பதிவு செய்கிறது.
“திறமை இருந்தால் மட்டும் போதுமா? அதை நிரூபிக்க வாய்ப்பும் கிடைக்க வேண்டுமே” என்ற முக்கியமான கேள்வியை முன்வைக்கிறது படம். இயக்குநர் வெற்றிச் செழியன் சமூகநீதிக் கருத்தை வலுவாக சொல்ல முயன்றிருக்கிறார்.
ஆனால் கதையில் இருக்கும் ஆழம் சில இடங்களில் திரைக்கதையில் முழுமையாக வெளிப்படவில்லை. சில காட்சிகள் இயல்பாக நகராமல் உருவாக்கப்பட்டவை போலத் தோன்றுவது படத்தின் வேகத்தை பாதிக்கிறது. அதேநேரம், சிறுவனின் திறமை மறுக்கப்படும்போது அவனுக்கு ஆதரவாக சிலர் ஒன்றிணையும் காட்சிகள் படத்திற்கு வலு சேர்க்கின்றன.
“ஓடுறவனுக்கு பல வழி இருக்கு… துரத்துறவனுக்கு ஒரு வழிதான் இருக்கு” போன்ற அழுத்தமான வசனங்கள் படத்தின் கருத்தை நேரடியாகச் சொல்லாமல் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
சிறு குறைகள் இருந்தாலும், சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை ஒரு சிறுவனின் செஸ் கனவின் வழியாகப் பேச முயன்றிருப்பதற்காக ‘தி கிராண்ட் மாஸ்டர்’ கவனம் பெறுகிறது.
தி கிராண்ட் மாஸ்டர் – சமூகநீதியின் காய்களை நகர்த்தும் முயற்சி.
⭐ ⭐ ⭐ 3/5



