தமிழ்நாட்டில் பா.ஜனதாவை வளர்க்க முடியாததால் தி.மு.க. மீது அடிக்கடி குற்றம் சாட்டுவதாகவும், குட்டிக்கரணம் போட்டாலும் அந்த கட்சி தமிழகத்தில் வளராது. அது மேல்தட்டு மக்களின் கட்சி என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இதற்கு பதில் அளித்து பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது, எத்தனை குட்டிக்கரணம் போட்டு அவர்கள் தி.மு.க.வை வளர்த்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதைவிட நன்றாக குட்டிக்கரணம் போட்டு எங்களாலும் பா.ஜனதாவை வளர்க்க முடியும். பா.ஜனதா மத்திய மந்திரி திராவிட கட்சியால் தான் இந்த அளவுக்கு வளர முடிந்தது என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட கட்சியினரை தேசிய சிந்தனையுடன் மத்திய அமைச்சர்களாக்கி அழகு பார்த்தது பா.ஜனதா என்பதை அவர் மறந்து விடக்கூடாது. நாங்கள் அடித்தட்டு மக்களுக்காகவும், அவர்களது பிரச்சினைகளுக்காகவும் பாடுபட்டு கொண்டிருக்கிறோம். எங்கள் நிர்வாகிகள் சொத்து கணக்கை காட்ட தயாராக இருக்கிறோம். மு.க.ஸ்டாலினும், அவரது கட்சி நிர்வாகிகளும் சொத்துக்கணக்கை வெளியிட தயாரா? அப்போது தெரியும். எந்த கட்சி அடித்தட்டு கட்சி? எந்த கட்சி மேல் தட்டு கட்சி என்பது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே மத்திய சென்னை மாவட்ட பா.ஜனதா மகளிர் அணியினர் சார்பில் ரேசன் கடைகளில் உணவு பொருட்கள் வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து தமிழிசை பேசினார். அப்போதுஅவர் கூறியதாவது,
நாங்கள் ரேசன் உணவு பொருட்கள் பிரச்சினைக்காகத்தான் போராட்டத்தை அறிவித்தோம். இப்போது மேலும் பல பிரச்சினைகளுக்காக போராட வேண்டிய சூழ்நிலையை தமிழக அரசு ஏற்படுத்தியிருக்கிறது. பொருட்கள் தட்டுப்பாட்டுக்கு காரணம் டெண்டர் விடுவதில் பிரச்சினை என்கிறார்கள். அது டெண்டர் பிரச்சினையா? அல்லது டெம்பிரவரி அரசு பிரச்சினையா? என்பது தெரியவில்லை. வாட் வரி உயர்த்தியதன் காரணமாக எல்லா பொருட்களும் 20 சதவீதம் விலை உயர்ந்துள்ளது.
மத்திய அரசு ஒரு சிறு அளவில் வரி உயர்வு கொண்டு வந்தால் கூட கொந்தளிக்கிறார்கள். இப்போது நேரடியாகவே இவ்வளவு சுமையை மக்கள் மீது ஏற்றியிருக்கிறார்கள். பா.ஜனதாவை பொறுத்தவரை பூவில் தேன் எடுப்பது போல் வலி தெரியாமல் வரியை ஏற்றும். ஆனால் வலிக்க வலிக்க வரி போடுகிறது தமிழக அரசு. உணவு பாதுகாப்பு சட்டத்தின் மூலம் மானியம் எதையும் மத்திய அரசு குறைக்கவில்லை. வீணாக மத்திய அரசு மீது பழி போடுவது தவறு. இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர்கள் அனு சவுந்திரமவுலி, அனிதா வெங்கட், கரு.நாகராஜன், சென்னை கோட்ட பொறுப்பாளர் லட்சுமிசுரேஷ், இணை பொறுப்பாளர் ஜமீலா, மாவட்ட தலைவிகள் ரமா, லலிதா, ரஜினிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் சந்தானலட்சுமி நன்றி கூறினார்.