உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் இது அமைந்துள்ளது. தாஜ்மகாலை பாரதீய ஜனதா தலைவர்கள் அடுத்தடுத்து விமர்சித்து வருகிறார்கள். முதலில் அது உத்தர பிரதேச மாநில சுற்றுலா கையேட்டில் இருந்து மாநில பா.ஜனதா அரசு நீக்கியது. அதையடுத்து பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. வானசங்கீத் சாம் கூறும்போது, “தாஜ்மகாலுக்கு இந்திய வரலாற்றில் இடம் அளிக்க கூடாது. அது துரோகிகளால் கட்டப்பட்டது. அது இந்திய வரலாற்றின் களங்கம்” என்று தெரிவித்து இருந்தார்.
இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்ய நாத் பதில் அளிக்கும்போது, “தாஜ்மகாலை பாதுகாக்கும் பொறுப்பு மாநில அரசுக்கு உண்டு. அது இந்தியர்களின் ரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டப்பட்டது” என்று தெரிவித்தார். இந்த நிலையில் தாஜ்மகால் ஒரு இந்து கோவில் என்று பாரதீய ஜனதா எம்.பி. வினய்கட்டியார் கருத்து தெரிவித்து உள்ளார். இது மீண்டும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இதுகுறித்து எம்.பி. வினய்கட்டியார் கூறியதாவது,
தாஜ்மகால் ஒரு இந்து கோவிலாக இருந்தது. அங்கு சிவன் கோவிலுக்கான அடையாளங்கள் இருந்தன. தேஜோ மகால் என்று முன்பு அழைக்கப்பட்டு இருந்தது. கோபுரத்தில் இருந்து சிவலிங்கத்தின் மீது தண்ணீர் சொட்டு சொட்டாக விழும் வகையில் கட்டப்பட்டு இருந்தது. இதை அவர்கள் அகற்றி விட்டனர். முகலாய மன்னர்கள் பல கோவில்களை இடித்துவிட்டனர். எங்கெல்லாம் வாய்ப்பு கிடைத்ததோ அங்கெல்லாம் நமது கோவில்களை அகற்றி விட்டனர். எங்களது தேஜோ மகால் கோவில் பராமரிக்கப்பட வேண்டும். தாஜ்மகாலின் வரலாற்றை ஆய்வு செய்தால் அது கோவிலாக இருப்பதற்கான சான்று கிடைக்கும். தாஜ்மகால் பெயரை தேஜோ மகால் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு வினய் கட்டியார் கூறியுள்ளார்.