தீபாவளி திருநாளை முன்னிட்டு வரும் நவம்பர் 6ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நடிகர் சூர்யாவின் ‘சீன்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சூர்யா, நஸ்ரியா நஜீம், நஸ்லென், ஆனந்தராஜ், லால், ராஜ் பிரியன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ழகரம் ஸ்டுடியோஸ் மற்றும் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் சூர்யா – ஜோதிகா இணைந்து தயாரித்துள்ளனர்.
சென்னையில் நடைபெற்ற இவ்விழாவில் படக்குழுவினருடன் நடிகர்கள் சிவகுமார், கார்த்தி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன், ‘சீன்’ படத்தில் சூர்யாவை முற்றிலும் வித்தியாசமான தோற்றத்திலும் கதாபாத்திரத்திலும் ரசிகர்கள் பார்க்கலாம் என்றும், நகைச்சுவை, திரில்லர், காதல், மாஸ் என பல அம்சங்கள் நிறைந்த பொழுதுபோக்குத் திரைப்படமாக இது இருக்கும் என்றும் தெரிவித்தார். புதிய திறமையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில் தொடங்கப்பட்ட ழகரம் ஸ்டுடியோஸின் முதல் திரைப்படம் இது என்றும் குறிப்பிட்டார்.
இணை தயாரிப்பாளர் ஜெயஸ்ரீ தாமோதரன் பேசுகையில், நல்ல படைப்புகளை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற சூர்யாவின் கனவின் தொடக்கமாக ‘சீன்’ அமைந்துள்ளதாகத் தெரிவித்தார். இயக்குநர் ஜித்து மாதவன் உள்ளிட்ட கேரளாவைச் சேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் சென்னையில் ஓராண்டு தங்கி அர்ப்பணிப்புடன் இப்படத்தை உருவாக்கியதாகவும், சமூக ஊடகங்களில் பிரபலமான இளம் திறமையாளர்களுக்கும் இப்படத்தில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நடிகர் ஆனந்தராஜ், இப்படத்தில் சூர்யாவின் தந்தையாக நடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டார். நடிகர்கள் ராஜ் பிரியன், டிராவிட் செல்வம் ஆகியோர் சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவத்தை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, சமூக ஊடகங்களில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வந்தவர்களுக்கு இப்படத்தின் மூலம் திரையுலகில் வாய்ப்பு கிடைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
விநியோகஸ்தர் சக்தி வேலன் பேசுகையில், சூர்யாவின் ஊக்கமும் ஆதரவும் தனது திரையுலகப் பயணத்தில் முக்கியப் பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டார். ‘சீன்’ ஒரு வித்தியாசமான க்ரைம் திரில்லர் கலந்த நகைச்சுவைப் படமாக இருக்கும் என்றும், திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ரசிக்கத்தக்க பல காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
நடிகர் நஸ்லென், ‘சீன்’ திரைப்படம் தனது முதல் தமிழ்ப் படம் என்றும், தமிழ் ரசிகர்கள் அளித்து வரும் அன்புக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார். இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாமும் இது தனது முதல் தமிழ்த் திரைப்படம் என்றும், சூர்யாவுடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம் என்றும் தெரிவித்தார்.
நடிகை நஸ்ரியா நஜீம், 12 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் நடித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், சூர்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என்றும் கூறினார். தமிழ் ரசிகர்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி தெரிவித்ததுடன், நவம்பர் 6ஆம் தேதி அனைவரும் படத்தைத் திரையரங்குகளில் கண்டு ரசிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நடிகர் கார்த்தி பேசுகையில், சூர்யாவின் திரைப்பயணத்தில் ‘காக்க காக்க’, ‘பிதாமகன்’, ‘ஆய்த எழுத்து’ உள்ளிட்ட படங்கள் ஏற்படுத்திய தாக்கத்தை நினைவுகூர்ந்தார். தொடர்ந்து ‘கருப்பு’, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘சீன்’ படத்திலும் சூர்யா முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகப் பாராட்டினார். இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தை டார்க் ஹியூமர் கலந்த வித்தியாசமான பொழுதுபோக்குப் படமாக உருவாக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
இயக்குநர் ஜித்து மாதவன் பேசுகையில், படத்தைப் பற்றிய முன்னோட்டங்களையும் டீசர்களையும் பார்த்து ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை உருவாக்கிக் கொள்ளலாம் என்றும், நவம்பர் 6ஆம் தேதி திரையரங்குகளுக்கு வந்து தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.
நிகழ்ச்சியின் முக்கிய தருணமாக நடிகர் சூர்யா பேசுகையில், திரையுலகில் 28 ஆண்டுகளாகத் தொடர்ந்து தன் மீது அன்பு செலுத்தி வரும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். ரசிகர் மன்றத்தின் சமூக நலப்பணிகளையும் குறிப்பிட்ட அவர், 500 நன்கொடையாளர்களுடன் தொடங்கிய ரத்ததானப் பணி தற்போது ஆண்டுக்கு 5,000 நன்கொடையாளர்கள் வரை வளர்ந்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். ரசிகர்கள் ஒன்றிணைந்து பலருக்கு மருத்துவ உதவிகளையும் செய்து வருவதாகக் குறிப்பிட்டார்.
மேலும், இயக்குநர் ஜித்து மாதவனின் படைப்புகள் தனக்குப் பிடித்திருப்பதாகவும், ‘சீன்’ திரைப்படமும் ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவத்தை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி வாழ்க்கையில் மன அமைதியும் ஆரோக்கியமும் மிகவும் முக்கியம் எனக் குறிப்பிட்ட சூர்யா, வாழ்க்கை மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும், மூச்சு இருக்கும் வரை எதுவும் முடிவல்ல; எல்லாவற்றையும் மாற்றவும் சரிசெய்யவும் முடியும் என்றும் நம்பிக்கையூட்டும் வகையில் பேசினார். தனது வாழ்க்கைப் பயணத்தில் துணையாக இருக்கும் மனைவி ஜோதிகாவுக்கும் நன்றி தெரிவித்தார்.
இசை, நகைச்சுவை, ஆக்ஷன், திரில்லர் எனப் பல அம்சங்களுடன் உருவாகியுள்ள சூர்யாவின் ‘சீன்’ திரைப்படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.


