தரையில் இருந்தும், கடலில் இருந்தும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட ப்ரம்மோஸ் ஏவுகணை, தற்போது முதல் முறையாக வானில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தரை, கடல், விமானம் மூலம் ஏவப்படும் முதல் ஏவுகணை என்ற பெருமை ப்ரம்மோஸுக்கு கிடைத்துள்ளது. சுக்கோய்-30 ஜெட்டில் இருந்து ப்ரம்மோஸ் ஏவுகணை ஏவப்பட்டவுடன், அது வானில் சில நொடிகள் விழுந்து, பின்னர் இயங்கத் துவங்கியது.
அதில் உள்ள இரண்டு தள எஞ்சின்கள் வெற்றிகரமாக இயங்கி, ஏவுகணையை இலக்கை நோக்கி கொண்டு சென்று தாக்கியது. இந்த சோதனை வெற்றியை தொடர்ந்து, இந்திய பாதுகாப்புத்துறை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (DRDO) பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். ப்ரம்மோஸ் ஏவுகணை இந்திய மற்றும் ரஷ்யாவின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.