போராட்டமே வாழ்க்கையா? போக்குவரத்து ஓய்வூதியர்கள் காத்திருப்பு போரட்டம்

மாதாமாதம் பென்ஷனை உரிய தேதியில் வழங்க வேண்டும் என அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சென்னை பல்லவன் சாலையில் உள்ள பென்ஷன் டிரஸ்ட் முன்பு சங்க தலைவர் கர்சன் தலைமையில் வியானன்று (மார்ச் 16) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பென்ஷன் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும், புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், 2003ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதிக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களை தற்போது உள்ள ஓய்வூதிய திட்டத்தில் இணைக்க வேண்டும், 1.9.2010க்குப் பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கும் ஒப்பந்த பலனை வழங்க வேண்டும், வாரிசு பென்ஷந்தாரர்களுக்கு (பெண்கள்) மருத்துவப்படி 100ம், ஒப்பந்த ஓய்வூதிய உயர்வு 15 விழுக்காடும் வழங்க வேண்டும், ஓய்வூதிய ஆணையை ஓய்வூதியம் பெறும் மாதத்திலேயே வழங்க வேண்டும், 16 மாதமாக நிலுவையில் அகவிலைப்படியை வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள அனைத்து பணப்பலன்களையும் உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதுகுறித்து தலைவர் கர்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளவர்கள் 65 ஆயிரம் பேர். 5 ஆயிரம் கோடி ரூபாய் தொழிலாளர்களின் பணம் நிர்வாகத்திடம் உள்ளது. இந்நிலையில் பிப்ரவரி மாத பென்ஷனை இதுவரை வழங்கவில்லை. எங்கள் பணத்தை வைத்துக் கொண்டு எங்களுக்கு பென்ஷன் வழங்காமல் மாதாமாதம் அலைக்கழிக்கிறார்கள். நிர்வாகத்திடம் கேட்டால் பணம் இல்லை எனக் கை விரிக்கிறார்கள். ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்தி வருகிறோம். வேறு வழியில்லாமல் வயதான காலத்தில் மாதாமாதம் போராடிக் கொண்டிருக்கிறோம். வயதான காலத்தில் போரட்டாமே வாழ்க்கையாகிப் போய்விட்டது. தற்போது காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார்.

போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், அரசு போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் பாலகிருஷ்ணன், சென்னை கிளை செயலாளர் கே.வீரராகவன், வரதராஜன், அரசு விரைவு போக்குவரத்துக் கழக நிர்வாகி சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்கள். இதில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.