தமிழகத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்ததையடுத்து ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வில் ஏற்பட்ட குழப்பமான சூழ்நிலையில், எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். தங்களுக்கு பெரும்பான்மை இருப்பதாக ஓ.பி.எஸ். அணி கூறி வந்தநிலையில், சட்டமன்றத்தில் கடும் அமளிக்கிடையே நம்பிக்கை வாக்கெடுப்பிலும் எடப்பாடி பழனிச்சாமி அரசு வெற்றி பெற்று, தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.
ஜெயலிலதா இருந்தபோதே இலவச திட்டங்களால் அரசு கடும் நிதிச்சுமையில் இருந்தது. அவர் வழியில் அவர் விட்டுச் சென்ற இலவச திட்டப்பணிகளை முன்னெடுத்துச் செல்ல எடப்பாடி பழனிச்சாமி அரசும் தீவிரமாக உள்ளதால் பட்ஜெட்டில் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டிய நிலை இருந்தது. எனவே, ஜெயலலிதா இருந்தபோது தாக்கல் செய்த பட்ஜெட்டைப் போன்று, இந்த ஆண்டும் வரி இல்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா? அல்லது புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த பரபரபான சூழ்நிலையில் இன்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் 2017-18ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை. தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலான பல்வேறு நலத்திட்டங்களுக்கு கணிசமான அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.