ஒரு படத்தின் பட்ஜெட்டை அப்படத்தின் கதை தான் முடிவு செய்யும். பெரிய பட்ஜெட் படமென்றால் அதன் கதையும் அவ்வளவு விரிவாகவும் பெரிதாகவும் இருக்கும். இது போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு கலை இயக்கம் தூணாக இருக்கும். அப்படியான ஒரு படம் தான் ‘வேலைக்காரன்’. சிவகார்த்திகேயன், நயன்தாரா மற்றும் பஹத் பாசில் நடிப்பில் , மோகம் ராஜாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வேலைக்காரன்’. இப்படத்தை ’24AM Studios’ R D ராஜா தயாரித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இப்படத்திற்காக பிரத்யேகமாக போடப்பட்ட ‘ஸ்லம்’ எனப்படும் ‘குடிசை வாழ் மக்களின் வாழ்வியலை பிரதிபலிக்கும் மிகப்பெரிய செட் உருவான விடியோவை வெளியிட்டனர். இப்படத்தின் கலை இயக்குனர் முத்துராஜ் இந்த செட்டின் யதார்த்தத்தின் மூலமும் அளவுகோல் மூலமும் அனைவரையும் வாய் பிளக்க வைத்துள்ளார்.
இது குறித்து இப்படத்தின் கலை இயக்குனர் முத்துராஜ் பேசுகையில் , ” கதை படி இப்படத்தின் கதாநாயகனும் நண்பர்களும் இந்த ஏரியாவில் வாழ்பவர்கள் என்பதால் படத்தின் ஒரு பெரும் பகுதி இந்த ஏரியாவில் தான் நடக்கின்றது. தயாரிப்பாளர் R D ராஜா தான் இந்த முழு எரியவையே செட்டாக போட்டுவிடலாம் என்றே யோசனையை தந்தார். இந்த செட்டிற்காக சுமார் பத்து முதல் பதினைந்து இடங்களை நேரில் சென்று பார்த்து , அங்கு வாழும் மக்களின் வாழ்வு முறையையும், அந்த இடங்களையும் நன்கு உள்வாங்கி, நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு இந்த செட்டை உருவாக்கினோம். இந்த செட்டை முழுவதும் முடிக்க சுமார் ஐம்பத்தைந்து நாட்கள் ஆனது. தினசரி கூலி வாங்கும் தொழிலாளிகள் மற்றும் எல்லா மதத்தை சார்ந்த அடித்தட்டு மக்கள் வாழும் ஒரு தத்ரூப ஏரியாவாக இந்த இடத்தை உருவாக்கவேண்டுமென்பது எங்கள் நோக்கமாக இருந்தது. உருவாக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு குணாதிசயமும் நோக்கமும் இருக்கும்.
மேலும் எதார்த்தத்தை கொண்டு வர முழு செட்டையுமே நெரிசல் மிகுந்த இடமாக வடிவமைத்தோம். நிஜ குப்பைகள், பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்கள் ஆகியற்றை உபயோகித்து அந்த எரியாவின் இயல்பை கொண்டு வர முனைந்துள்ளோம். இந்த முழு செட்டையும் சுற்றி ஒரு கூவத்தையும் உருவாக்கியுள்ளோம். இந்த செட்டின் மொத்த பரப்பளவு 7.5 ஏக்கராகும். இந்த செட்டில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். தயாரிப்பாளர் R D ராஜாவின் ஆதரவாலும் ஒத்துழைப்பாலுமே இவ்வளவு பெரிய செட் சாத்தியமானது. இந்த படம் சிவகார்த்திகேயனை அடுத்த லெவலிற்கு நிச்சயம் கொண்டு போகும். இயக்குனர் மோகன் ராஜாவின் கதை மற்றும் எழுத்து மிக சிறப்பாக அமைந்துள்ளது. எங்கள் எல்லோரின் ஒட்டுமொத்த உழைப்பையும் பாராட்டி இப்படத்தை மக்கள் நிச்சயம் ரசிப்பார்கள் என நம்புகிறேன் ” இப்படம் ராம்ஜியின் ஒளிப்பதிவில் , அனிருத்தின் இசையில் , ரூபனின் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தில் RJ பாலாஜி, சினேகா,ரோபோ ஷங்கர், சதிஷ் மற்றும் விஜய் வசந்த் ஆகிய நடிகர்கள் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் டிசம்பர் 22 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸாகவுள்ளது.