சட்டசபையில் இருந்து தாக்கி வெளியேற்றப்பட்ட எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மெரீனாவில் காந்தி சிலை அருகே உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். உடனடியாக பல்லாயிரக்கணக்கானோர் குவிந்தனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது செய்யப்பட்டனர். சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்டாலின் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து சட்டசபையில் நடந்த நிகழ்வுகள் குறித்து விளக்கி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அரசு பெரும்பான்மையை நிரூபித்தது செல்லாது என அறிவிக்கக் கோரினார்.
அவைக் காவலர்களின் தாக்குதலில் கிழிந்த சட்டசபையுடன் சட்டசபையில் இருந்து கிளம்பிய ஸ்டாலின், நேராக ஆளுநர் மாளிகை சென்றுவிட்டு காந்தி சிலைக்கு வந்தார். ஸ்டாலின் உண்ணாவிரதத்தை துவக்கிய அறிந்த ஏராளமான திமுகவினர் மெரீனாவில் குவிந்தனர். சென்னை முழுவதும் பல பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. காந்தி சிலை முன்பு ஸ்டாலினுடன் துரைமுருகன் உள்ள எம்எல்ஏக்களும் கனிமொழி, தயாநிதி மாறன் ஆகியோரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதனையடுத்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் 88 பேரை போலீசார் கைது செய்தனர் கடற்கரை சாலையே பரபரப்பாக காணப்பட்டது.
போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. கல்வீச்சு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மீது நடைபெற்ற வன்முறையைக் கண்டித்து கடலூரில் அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதே போன்று பெரம்பலூர், ஈரோட்டிலும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.