சசிகலா கோஷ்டியை விட்டு தப்பி ஓடி ஓபிஎஸ் அதிமுகவில் இன்னும் 6 எம்.எல்.ஏக்கள் சேர்ந்தால் ஆட்சி கவிழ்ந்துவிடுமே என்ற கவலையில் ஆழ்ந்துள்ளாராம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. சசிகலா முதல்வராக வேண்டும் என்பதற்காக கூவத்தூர் உல்லாச விடுதியில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டனர். ஆனால் சசிகலாவின் நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டது உச்சநீதிமன்ற தீர்ப்பு. சசிகலா சிறைக்குப் போக நேர்ந்ததால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக்கப்பட்டார். கூவத்தூரில் சிறை வைக்கப்பட்ட 122 எம்.எல்.ஏக்களை அப்படியே சட்டசபைக்குள் ஆஜர்படுத்தி எடப்பாடி பெரும்பான்மையை நிரூபித்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் கோவை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. அருண்குமார் புறக்கணித்தார். தற்போது திடீரென ஓபிஎஸ் அதிமுகவுடன் அருண்குமார் கைகோர்த்துவிட்டர். இதனால் ஓபிஎஸ் அதிமுகவில் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது. இது எடப்பாடி பழனிச்சாமி அணியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இன்னும் 6 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் முகாமில் இருந்து தப்பி ஓடிவிட்டால் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற பீதியில் உள்ளது எடப்பாடி அணி. அந்த 6 பேர் யாராக இருக்கும் என யூகிக்கவும் முடியாமல் திணறுகிறதாம் சசி கோஷ்டி.
இந்த உதறலை மறைக்கத்தான் திமுகவில் இருந்து 15 எம்.எல்.ஏக்கள் எங்க பக்கம் வரப்போகிறாங்க என உளறி கொட்டினாராம் தினகரன். இருக்கிற எம்.எல்.ஏக்களை தக்க வைக்க முடியாத தினகரனின் இந்த உளறல் பேச்சை அதிமுகவினரே சகிக்கலையாம்.