சியேர்ரா லியோனின் தலைநகர் ஃப்ரீடவுன் அருகே நேற்று ஏற்பட்ட ஒரு நிலச்சரிவில், பலியானோர் எண்ணிக்கை 400-ஐ கடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மலைப்பகுதின் அடியில் உள்ள குடியிருப்பு பகுதியின் மேல் இந்த பெரும் நிலச்சரிவு ஏற்பட்டதில், சுமார் 3000 பேர் வீடுகளை இழந்துள்ளனர்; 600 பேரை காணவில்லை. ஆப்பிரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான நிலச்சரிவாக இது கருதப்படுகிறது. மீட்புப் படையினர் இதுவரை 400 உடல்களை மீட்டுள்ளனர்.
ஆனால் பலி எண்ணிக்கை 500-ஐ கடக்க வாய்ப்புள்ளதாகவும், மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றன. “சுமார் 3000 பேர் வீடுகளை இழந்துள்ளனர். அவர்களுக்கு உணவு, தங்கும் இடம், மருத்துவ வசதிகள் தேவைப்படுகிறது,” என சியேர்ரா லியோன் செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. காலரா போன்ற நோய்கள் பரவும் அபாயமும் உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இந்த நிலச்சரிவை தொடர்ந்து, 7 நாட்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.