கிராமத்து காதல் கதையாக உருவாகியுள்ள ‘சேரநாட்டு யானைதந்தம்’ – இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை முத்து நடிப்பில் உருவாகியுள்ள ‘சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தியாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம், எதார்த்தமான கிராமத்து காதல் கதையாக உருவாகியுள்ளது. இதில் ராஜசிம்மன், பாண்டி அக்கா, விஜயன் தியாகராஜன், காந்தராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.சி. குமரேசன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ். பார்த்திபன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுகபாரதி மற்றும் தோழன் பாடல்களை எழுதியுள்ளனர்.

 

விழாவில் பேசிய இயக்குநர் பூலோகம் ரவி, பல ஆண்டுகளாகப் பல்வேறு தடைகளையும் பொருளாதாரச் சவால்களையும் கடந்து இப்படத்தை உருவாக்கியதாகத் தெரிவித்தார். படத்தின் நாயகன் மும்பை முத்துவின் அர்ப்பணிப்பையும், தயாரிப்பாளர் வையாபுரி கணேஷ் அளித்த ஆதரவையும் குறிப்பிட்ட அவர், படத்தின் உருவாக்கத்தில் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளதாகக் கூறினார். இசையமைப்பாளர் ஏ.சி. குமரேசன் பாடல்கள் உருவான அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இயக்குநர் செந்தமிழன், பூலோகம் ரவியின் உழைப்பையும் கதை சொல்லும் திறனையும் பாராட்டினார்.

 

சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்ட இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, விநியோகஸ்தர் ஜின்னா உள்ளிட்டோர் படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரைப் பாராட்டி வாழ்த்தினர். இயல்பான கிராமத்து வாழ்வியலையும் காதலையும் மையமாகக் கொண்ட இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெறும் என நம்பிக்கை தெரிவித்தனர். பிரைடே பிக்சர்ஸ் சார்பில் ஜின்னா இப்படத்தைத் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். ‘சேரநாட்டு யானைதந்தம்’ திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.