தலித்தாகப் அனிதாவை பார்ப்பது ரஞ்சித்துக்கு ஆபத்து – சீமான் எச்சரிக்கை

Kavingnar Jayamkondan

மாணவி அனிதாவை, போராடுகிறவர்கள் எல்லோரும் தங்கையாகப் பார்க்க்கும் போது, நீங்கள் மட்டும் அவரை தலித் ஆகப் பார்ப்பது; உங்கள் சிந்தனைக்கும், பேச்சுக்கும் ஆபத்தானது என்று இயக்குநர் ரஞ்சித்துக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இயக்குநருமான சீமான் எச்சரிக்கை செய்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட மருத்துவ மாணவி அனிதாவுக்கு திரையுலகம் சார்பில் அஞ்சலி செத்தும் கூட்டத்தில், ஊருக்கு ஒரு சேரியும்; தெருவுக்கு ஒரு சாதியும் இன்னும் இருக்கிறது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் இயக்குநர் பா.ரஞ்சித். 

அதற்கு, நாம் அனைவரும் இங்கு அனிதாவுக்காக கூடியிருக்கிறோம். சாதிகளைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என இயக்குநர் அமீர் பதில் தரவே, அப்போது குறுக்கிட்ட இயக்குநர் பா.ரஞ்சித், தமிழன் சாதியால் பிரிந்துகிடக்கிறான். இதை ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும் என்றார். இந்த மாறுபட்ட கருத்துகளால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில், ரஞ்சித் பேச்சுக்கு, திரைப்பட இயக்குநரும்; நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான சீமான், நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவருக்கு எச்சரிக்கை செய்யும் விதமாக பேசினார்.

சீமான் பேசியது, ரஞ்சித் கோபம் நியாயமானது. அவர் ஆதங்கத்தை யாரும் மறுக்க முடியாது. ரஞ்சித் சொல்கிற வேதனையும், காயங்களும் எல்லோருக்கும் இருக்கிறது. அதற்காக வெட்கித் தலைகுனிகிறோம். புரையோடிப்போன சாதியப் புற்று நம் இனத்தை செல்லரித்துக் கொல்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். போராடுகிற எல்லோரும் அனிதாவை தங்கையாகப் பார்க்கிறார்கள். ரஞ்சித் தலித்தாகப் பார்க்கிறார். இது அவரின் சிந்தனைக்கும், பேச்சுக்கும் ஆபத்தானது.

பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டும், நீட் தேர்வுக்கு எதிராகவும் போராடுகிறார்கள். போராடும் அத்தனை பேரும் தலித் மாணவர்கள் தானா? எல்லா மாணவர்களும் போராடியதுதான் வரலாற்றின் பெரும் மாற்றம். இந்த உணர்வைதான் ஊட்டி வளர்க்க வேண்டும். அதுதான் முக்கியம் என்று சீமான் பேசியுள்ளார்.