தனுஷ் நடிக்கும், ‘கேப்டன் மில்லர்’ படத்தில் இணைந்துள்ள தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சந்தீப் கிஷன்

சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம், தனுஷ் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் “கேப்டன் மில்லர்”  திரைப்படத்தில், தெலுங்கு திரையுலகின் பிரபல முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக  அறிவித்துள்ளது.

தனுஷ் நடிக்கும்  “கேப்டன் மில்லர்”   படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றதுடன், இதுவரையிலான தமிழ் திரைப்படங்கள் பெற்றிடாத எண்ணிக்கையில், பார்வைகளை பெற்று சாதனை படைத்தது. முன்னணி நட்சத்திரம், பிரபல தொழில் நுட்ப கலைஞர்களுடன்  இப்படம் தற்போதே ரசிகர்களிடம்  பெரும்  எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் அடுத்த கட்டமாக ஆவலை இன்னும் கூட்டும் வகையில், தெலுங்கு திரையுலகின் பிரபல முன்னணி நடிகர் சந்தீப் கிஷன் இப்படத்தில் முக்கியமான பாத்திரத்தில் இணைந்துள்ளார்.

தெலுங்குத் திரையுலகில் தனது தொடர்ச்சியான வெற்றிகள் மூலம், முன்னணி பிரபலமாக, வெற்றிகரமான கமர்சியல் நடிகர்களில் ஒருவராகப் புகழ் பெற்றவர்  நடிகர் சந்தீப் கிஷன். தற்போது விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் போன்ற பெரிய பிரபலங்களுடன் இணைந்து, அவர் நடிக்கும் ‘மைக்கேல்’ படமும் பெரிய  எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் திரையுலகில் அறிமுகமான ‘மாநகரம்’ படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த திரைப்படத்தில் தனுஷுடன் அவர் இணைந்து பணியாற்றுவது, இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்த பிரமாண்ட திரைப்படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.

நடிகர் தனுஷின்  திரைப்படங்கள் தெலுங்கு  திரையுலகில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்றதில் , அவருக்கு தெலுங்கிலும்  நல்லதொரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது.  தற்போது இந்த அற்புதமான நட்சத்திர நடிகர்களின் கூட்டணியில், ‘கேப்டன் மில்லர்’ தெலுங்கு பார்வையாளர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும்.

கேப்டன் மில்லர் படம் குறித்தான இன்னும் பல ஆச்சர்யங்களை சத்ய ஜோதி பிலிம்ஸ்
விரைவில் அறிவிக்கவுள்ளது.

“கேப்டன் மில்லர்”  படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். பெரும் பாராட்டுக்களை குவித்த “ராக்கி, சாணிகாயிதம்” படங்கள் மூலம் புகழ்பெற்ற அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார்.

ஜிவி பிரகாஷ் குமார் (இசை), மதன் கார்க்கி (வசனம்), ஸ்ரேயாஸ் கிருஷ்ணா (ஒளிப்பதிவு), நாகூரன் (எடிட்டர்), T. ராமலிங்கம் (கலை), பூர்ணிமா ராமசாமி & காவ்யா ஸ்ரீராம் (ஆடை வடிவமைப்பு), திலீப் சுப்பராயன் (ஆக்சன்), ட்யூனி ஜான் 24am (பப்ளிசிட்டி டிசைனிங்) ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.
 
கேப்டன் மில்லர் 1930-40 காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு வரலாற்று திரைப்படமாகும். மேலும் இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ளது.