கர்நாடகாவின் சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா தமிழகத்தில் உள்ள முன்னணி தனியார் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில், சிறையில் ஒரு வரிசையில் உள்ள அறைகள் முழுவதும் சசிகலாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. சுமார் 150 அடி நீளமுள்ள அந்த தாழ்வாரத்தின் முன் 5 அறைகள் இருந்தன. இதில் நடு அறையில் சசிகலாவும் இளவரசியும் இருந்தனர்.
தாழ்வாரத்தின் இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தன. சசிகலா இருந்த நடு அறையில் கட்டில், மெத்தை, எல்இடி டிவி இருந்தது. அந்த தாழ்வாரத்தில் இருந்த 5 அறைகளும் சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. அந்த அறைகளில் துணிகள், சொந்த மெத்தை உள்ளிட்டவற்றை வைத்திருந்தார்.
பொது சமையலறையில் சசிகலாவுக்கு என தனியாக சமைக்கப்பட்டது. மருத்துவரின் பரிந்துரைகள் ஏதும் இல்லாத நிலையில் இந்த சலுகை தருவது சரியா? சசிகலாவுக்கும் எனக்கும் இடையில் எந்த பிரச்னையும் இல்லை. சிறையில் நடைபெறும் விதிமீறல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தேன் என்று ரூபா தெரிவித்துள்ளார்.