அதிமுக பொது செயலாளரான சசிகலா, சென்னை பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா மண்டபத்தில் பிரமாண்ட விழாவில் முதலமைச்சராக பதவியேற்கிறார். அதிமுக கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர் முதல்வர் ஆவது உறுதியானது. வரும் 7ஆம் தேதி பதவியேற்பாரா…? அல்லது 9ஆம் தேதி பதவியேற்பாரா…? என்ற கேள்வி எழுந்தது. மேலும் எளிய முறையில் ஆளுனர் மாளிகையில், சசிகலா பதவியேற்பாரா அல்லது பிரமாண்ட விழா மேடை அமைத்து பதவியேற்பாரா அல்லது ஜெயலலிதா வழக்கமாக பதவியேற்கும் நூற்றாண்டு விழா மண்டபத்தில் ஏற்பாரா என்ற கேள்விகளும் சேர்ந்தே எழுந்தன. பிப்ரவரி 5ஆம் தேதி முதல்வர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, 2 நாள் இடைவெளிக்கு உள்ளாகவே 7ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார். பதவியேற்பு விழா எளிய முறையில் இல்லாமல், பிரமாண்டமாக பல ஆயிரம் பேர் அமரக்கூடிய சென்னை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்கிறார். சசிகலாவுடன் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, தமிழகத்தின் புதிய அமைச்சரவையும் பதவியேற்கிறது. சசிகலா பதவியேற்பு முன்னேற்பாடுகள் குறித்து மேற்பார்வையிடுவதற்காக அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜு, கே.பி.அன்பழகன் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் நூற்றாண்டு விழா மண்டபத்தை பார்வையிட்டனர். அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் விழா ஏற்பாடுகளை பார்வையிட்டதால், விழா இங்கு நடைபெறுவதும், 7ஆம் தேதி பதவியேற்பு என்பதும் உறுதியாகியுள்ளது.