சிவகார்த்திகேயன் சாதிக்க துடிக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் – அரவிந்து

நல்ல விஷயங்கள் சிந்தனையில் உணரப்படும்போது, செயல்களில் வெளிப்படுத்தப்படும்போது, ​​நல்ல மனிதர்களும் அதிர்ஷ்டமும் உங்கள் பயணத்தில் உடன் வருவார்கள் என்று ஒரு பழமொழி உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால பயணத்தில் இருந்து வெற்றிகரமான பயணம் வரை தன்னை இணைத்துக் கொண்டிருக்கும் ஆருத்ரா ஃபிலிம்ஸ் வினியோகஸ்தர் அரவிந்தை சரியான உதாரணமாக சொல்லலாம். அவரவர் துறைகளில் வெற்றி மற்றும்  வளர்ச்சியை போல, அவர்களுக்கு  மேலும் ஒரு உயர்ந்த தருணம் அமைந்துள்ளது. 
மகிழ்ச்சியில் இருக்கும் அரவிந்த இது குறித்து கூறும்போது, “சிவகார்த்திகேயன் நடித்த மெரினா படத்தில் ஆரம்பித்தது என் சினிமா விநியோக தொழில். அதனைத் தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை மற்றும் ரஜினி முருகன் படங்களை திருப்பூரில் வெளியிட்டேன். அவரது சமீபத்திய திரைப்படமான வேலைக்காரன் படத்தை திருச்சி, தஞ்சாவூர் ஏரியாவில் நான் வெளியிட்டேன். இந்த திரைப்படங்கள் அனைத்தும் எனக்கு நல்ல லாபத்தை  அளித்தன” என்றார்.
சிவகார்த்திகேயனின் வெற்றியைப் பற்றி அவர் கூறும்போது, “சிவகார்த்திகேயன் தற்போது  மிகப்பெரிய நட்சத்திரமாக மாறி, சாதிக்க துடிக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். இது அவரது வெற்றியை மட்டும் வைத்து சொல்லவில்லை, அவரது கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் சேர்த்துக் கொண்டிருக்கும் அவரது மனித இயல்பையும் வைத்தே சொல்கிறேன்.
நடிப்பில் 100% செயல்திறனை வழங்குவதை விட, ஒரு நடிகரின் வெற்றி விகிதம் அவரின் கதை தேர்வை பொறுத்தே அமைகிறது. தற்போதைய தலைமுறை நட்சத்திரங்களில், பார்வையாளர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் ரசனைகளுக்கு ஏற்ப சரியான படங்களை கணித்து, கதைத்தேர்வு செய்யும் திறமை சிவகார்த்திகேயனுக்கு உள்ளது. எனவே அவர் தனது முதல் தயாரிப்பாக ‘கனா’ படத்தை தேர்த்தெடுத்ததில் வியப்பேதுமில்லை. இந்த படத்தில் தனித்துவமான மற்றும் சிறப்பான ஏதாவது ஒன்று இருக்கும், அது அவரை கவர்ந்திருக்கும் என்று என்னால் நிச்சயமாக சொல்ல முடியும்” என்றார்.
மேலும் அவர் கூறும்போது, “அருண்ராஜா காமராஜ் இசை உலகில்  மிகப்பெரிய சாதனைகளுக்கு நன்கு அறியப்பட்டவர். அவர் இயக்குனராகும் முதல் படம் பெண்கள் கிரிக்கெட்டை மையப்படுத்தி இருப்பது ஈர்க்கிறது. மேலும், சத்யராஜ் சார், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பல சிறந்த நடிகர்கள் இந்த படத்தை அலங்கரிக்கிறார்கள். உண்மையில் அருண்ராஜாவின் திட்டவட்டமான திட்டமிடல் மற்றும் செயல்முறை என்னை மிகவும் கவர்ந்தது. குறித்த நேரத்தில் படத்தை முடித்து, தற்போது டப்பிங் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மரகத நாணயம் புகழ் திபு நிணன் தாமஸ் இசை அழகாக வந்திருக்கிறது, சில பாடல்களை கேட்டு நான் வியந்தேன். ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணனின் (சூது கவ்வும், சேதுபதி மற்றும் தானா சேர்ந்த கூட்டம்) ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் ஐகான் ரூபனின் படத்தொகுப்பு சந்தேகத்திற்கு இடமின்றி படத்தின் கூடுதல் சிறப்பாகும்” என்றார்.
கனா படத்தின் வியாபாரத்திற்கான விசாரிப்புகள் ஏற்கனவே தொடங்கி விட்டன, படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்னரே அனைத்து ஏரியா உரிமைகளும் விற்றுத் தீர்ந்து விடும் என்கிறார் ஆருத்ரா ஃபிலிம்ஸ் எஸ்.அரவிந்த்.