நாயகன் ரிஷிகேஷ், விவேக், அம்ஷத், அர்ஜுன் சிதம்பரம், சஞ்சிதா ஷெட்டி இந்த ஐந்து பேரும் கொள்ளையடித்து தங்களது தேவையை பூர்த்தி செய்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தில், ஒரு பங்கை நரேனுக்கும் கொடுத்து வருகின்றனர். சிறு சிறு கொள்ளைகளை நடத்தி வரும் இவர்களுக்கு ஒரு கண்டெய்னரில் விலையுயர்ந்த வைர கற்கள் வருவது நரேன் மூலமாக தெரிகிறது. அதை கொள்ளையடித்தால் தங்கள் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று முடிவு செய்து, அதை கொள்ளையடிக்க திட்டம் தீட்டுகிறார்கள். அதன்படி, அந்த கண்டெய்னரில் உள்ள வைர கற்களை கொள்ளையடிக்கின்றனர். கொள்ளையடித்த கற்களை எல்லாம் தன்னுடைய இடத்துக்கு கொண்டு வரும்படி கூறும் நரேன் மீது ரிஷிகேஷுக்கு சந்தேகம் வருகிறது.
இதனால் அந்த கற்களை எல்லாம் வேறு இடத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்கிறார். அப்போது, நரேனின் நண்பனான அர்ஜுன் சிதம்பரம் இவர்களுடன் சேர்ந்துகொண்டு, தனக்கு தெரிந்த பங்களாவில் அந்த கற்களை பத்திரமாக வைக்கலாம் என்று ஆலோசனை கூறுகிறான். அதன்படி, அந்த பங்களாவுக்குள் தாங்கள் கொள்ளையடித்த கற்களை கொண்டு போய் சேர்க்கின்றனர். அந்த பங்களாவுக்குள் ஒரு பேய் இருக்கிறது. அந்த பேய் இவர்களை அங்கிருந்து வெளியே செல்லவிடாமல் பங்களாவுக்குள்ளேயே சிறை வைக்கிறது. இதனால் பயந்துபோன அர்ஜுன் சிதம்பரம் நரேனுக்கு போன்போட்டு தகவல் சொல்ல, அடுத்தநாளே அர்ஜுன் இறந்துபோகிறான். இறுதியில், இவர்களை வெளியே போகவிடாமல் தடுக்கின்ற பேய் யார்? அந்த பேய் நரேனின் ஆளை மட்டும் கொல்ல காரணம் என்ன? நரேனுக்கும் அந்த வீட்டில் உள்ள பேயுக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ரிஷிகேஷ் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடித்தவர். அந்தவொரு தகுதியை மட்டுமே வைத்துக்கொண்டு இந்த படத்தில் கதாநாயகனாக களமிறங்கியிருக்கிறார். இந்த படத்தில் விவேக் பேசும் வசனம்தான் இவருடைய நடிப்புக்கும் பொருந்தியிருக்கிறது. அதாவது, இந்த மூஞ்சில மட்டும் ஏன் நடிப்பே வரமாட்டேங்குது? என்பதுதான். ரொம்பவும் அப்பாவியான இவரது முகத்தில் நடிப்பை வரவழைக்க ரொம்பவும் திணறியிருக்கிறார். வெறுமனே பொம்மை போல்தான் இவருடைய ஒட்டுமொத்த நடிப்பும் இருக்கிறது. சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ் என இரு கதாநாயகிகள் இருந்தாலும் படத்தில் எந்த காதல் காட்சிகளும் இல்லை. சஞ்சிதா ஷெட்டி படம் முழுக்க வலம் வந்திருக்கிறார். ஆனால், மியா ஜார்ஜுக்கே பிற்பாதியில் மட்டுமே வாய்ப்பு கொடுத்திருககிறார்கள்.
இருவரும் தங்கள் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். விவேக் தனது பாணியிலான காமெடியில் மீண்டும் கலக்கியிருக்கிறார். அவ்வப்போது இவர் கொடுக்கும் கவுண்டர் வசனங்கள் தியேட்டரில் விசில் சத்தத்தை எழுப்புகிறது. நரேன் மீண்டும் ஒரு வில்லன் கதாபாத்திரத்தில் வந்து மிரட்டியிருக்கிறார். ஆரம்பத்தில் இவருடைய கதாபாத்திரம் வேறுவிதமாக சென்றாலும், பிற்பாதியில் இவர்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று சொல்லும் விதம் அருமை. இயக்குனர் சாய் பரத், தமிழ் சினிமாவுக்கு பழகிப்போன ஒரு பேய் கதையையே வித்தியாசமான கோணத்தில் படமாக்க முயற்சி செய்திருக்கிறார்.
படத்தில் காமெடி, திரில்லர் என இரண்டையும் சரியாக கலந்து கதையை கொண்டு போயிருக்கிறார். கிராபிக் காட்சிகளில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். அனிருத்தின் பிண்ணனி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. சில இடங்களில் இவரது பின்னணி இசை நம்மை மிரள வைக்கிறது. பாடல்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு நிறைவை கொடுத்திருக்கிறது. விக்னேஷ் விசுவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.