பட்ஜெட்டில் 1000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது 100 நாள் வேலை திட்டத்திற்கு

தமிழக சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் தனது முதல் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் உள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு,

மாநில பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்கான சட்டத்தினை மாநில அரசே ஏற்கும். நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.10,067 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஊரக வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூ.469 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 1 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பயிற்சி திறன் மேம்பாடு இயக்கத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி தொடர்பான பேச்சுவார்த்கைளில் மத்திய அரசுடன் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

2017-18 நிதியாண்டில் வணிகவரி மூலம் ரூ.77,231 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் வறட்சி நிவாரண நிதியாக, தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.39,565 கோடி ஒதுக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில் துறைக்கு ரூ. 2,088 கோடி, குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ. 615 கோடி, தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய், தமிழ் வளர்ச்சிக்கு ரூ.48 கோடி என ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 30 கோடி ரூபாய் செலவில் 49 காவல் நிலையங்கள் கட்டப்படும்.