பாக்.கிலிருந்து இந்தியாவுக்குள் வர காத்திருக்கும் ரூ. 1,000 கோடி போலி ரூபாய் நோட்டுகள்

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடான பாகிஸ்தானில் போலி இந்திய ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு அவற்றை இந்தியாவில் புழக்கத்தில் விடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய உளவுத் துறை தெரிவிக்கிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த அமானுல்லா மற்றும் காலிக் ஆகியோர் ராவல்பிண்டியில் கள்ளநோட்டுகளைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அவற்றை இந்தியாவில் புழக்கத்தில் விடுவதற்காக இருவரும் வினோதமான முறையைக் கையாண்டுள்ளனர்.

ரூபாய் நோட்டுகளுடன் பாகிஸ்தானில் இருந்து விமானம் மூலம் துபாய் சென்ற அவர்கள், அங்கிருந்து வங்கதேச தலைநகர் டாக்காவுக்குச் சென்றனர். பின்னர் அண்டை நாடான இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தில் போலி ரூபாய் நோட்டுகளை இறக்குமதி செய்ய ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக ரூ.1,000 கோடி மதிப்பிலான போலி இந்திய ரூபாய் நோட்டுக்களை அவர்கள் தயாரித்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுதொடர்பாக மால்டா காவல் நிலையத்துக்கு உளவுத் துறையினர் தகவல் அளித்துள்ளனர்.

எனினும், மால்டா போலீஸார் விரைந்து செயல்படவில்லை என்று உளவுத் துறை குற்றம்சாட்டுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் இருந்து போலி ரூபாய் நோட்டுகள் இறக்குமதி செய்வதற்கான அடித்தளமாக மால்டா மாவட்டம் விளங்குவதாக உளவுத் துறையினர் கவலை தெரிவிக்கின்றனர். இலங்கை, நேபாளம், தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் வழியாகவும் இந்தியாவுக்கு கள்ளநோட்டுகள் கடத்தப்படுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2,000 நோட்டை போலியாக அச்சிட முடியாத வகையில் இந்திய ரிசர்வ் வங்கி சில பாதுகாப்பு அம்சங்களை கையாண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.