மத்திய ரிசர்வ் வங்கியின் தனித்துவத்தை காப்பாற்றுமாறு உர்ஜித் படேலுக்கு ஊழியர்கள்-அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல்

மத்திய ரிசர்வ் வங்கி பணியாளர்கள், அதிகாரிகள் ஆகியோரை பிரதிநிதித்துவம் செய்யும் சங்கம், ரிசர்வ் வங்கியின் தனித்துவத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கவர்னர் உர்ஜித் படேலுக்கு வலியுறுத்தியுள்ளனர்.மத்திய அரசு மத்திய ரிசர்வ் வங்கியின் மீது அமர்ந்து கொண்டிருக்கிறது என்று கடும் விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் ஆர்பிஐ சங்கம் கவர்னர் உர்ஜித் படேலுக்கு கடிதம் மூலம் தனித்துவத்தை பாதுகாக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.  உதாரணமாக ஆர்பிஐ-யின் பணப் பரிவர்த்தனை நடவடிக்கைகள் உட்பட ரிசர்வ் வங்கியுடன் ஒருங்கிணைந்து செயல்பட நிதியமைச்சகத்தின் இணை செயலரை நியமித்ததை இந்தச் சங்கம் குறிப்பிட்டுள்ளது. இந்த நடவடிக்கை ‘மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என்று அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.இது தொடர்பாக ஆர்பிஐ அதிகாரிகள், பணியாளர்கள் ஐக்கிய கூட்டமைப்பு எழுதிய கடிதத்தில், “ஆர்பிஐ-யின் ரொக்க நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து கவனிக்க மத்திய நிதியமைச்சகத்தின் இணைச் செயலாளர் ஒருவரை அனுப்பியுள்ளது என்ற சமீபத்திய செய்தியின் மீது எங்கள் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது. இது உண்மையாக இருக்கும்பட்சத்தில் ஆர்பிஐ-யின் சட்ட மற்றும் நடைமுறை செயல்பாடுகள் மீது அரசு தனது ஆதிக்கத்தைச் செலுத்தும் தனித்துவத்தை அவமதிக்கும் செயலாகும். எனவே ஆர்பிஐ-யின் தன்னாட்சி உரிமையை விட்டுக் கொடுக்காது காக்க வேண்டும்” என்று கூறியுள்ளனர். மேலும் இத்தகைய இணைச் செயலர் ஒருவரை அனுப்புமாறு ஆர்பிஐ கேட்கவில்லை என்று தாங்கள் அறிந்ததாகவும், நிதியமைச்சகம் ஆர்பிஐ நடவடிக்கைகள் மீது தன்னை திணித்துக் கொள்கிறது, இது நிச்சயம் ‘ஏற்றுக் கொள்ள முடியாதது மற்றும் விசனத்துக்குரியதுமாகும்’ என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.