தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பு செயலாளராக டாக்டர் ஜெயராணி காமராஜ் தேர்வு

மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்தைப் பேணும், ‘கருத்தரித்தல் மற்றும் மகப்பேறு மருத்துவ துறை’ தென்னிந்தியாவில் மிகப் பெரிய வளர்ச்சியை பெற்றிருக்கிறது. இந்த சாதனைக்கு, சேவை எண்ணம் கொண்ட சிறந்த டாக்டர்களின் பங்களிப்பே முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. கருத்தரித்தல், மகப்பேறு, மகளிர் நலம், கருத்தடைமுறைகள் உள்பட்ட குடும்ப நலமேம்பாட்டுக்காக சேவையாற்றிக் கொண்டிருக்கும் டாக்டர்கள் ஒருங்கிணைந்து ‘தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பு’  (Obstetric and Gynaecological Society of Southern India – OGSSI) என்ற அமைப்பின் கீழ் செயல்படுகிறார்கள்.

பழம்பெருமை வாய்ந்த இந்த அமைப்பு, மகப்பேறு துறை மருத்துவர்களால் இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பாரம்பரியமிக்க கூட்டமைப்பாகும். 1934-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த கூட்டமைப்பு மகளிர் நலன் சார்ந்த மருத்துவத்துறைக்கு மாபெரும் தொண்டாற்றி வருகிறது. நவீன மருத்துவம் தொடர்புடைய கருத்தரங்கங்கள், கலந்தாய்வு கூட்டங்கள், பயிற்சி பட்டறைகளை நடத்தி, புதிய சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் நவீன மருத்துவத்துறைக்கு வழங்கி வருகிறது.

83- வருட பாரம்பரியமிக்க இந்த ‘தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பு’  வருடந்தோறும் தலைவர் மற்றும் செயலாளாரை தேர்வு செய்கிறது. மருத்துவத்துறையில் மாபெரும் சாதனை படைத்த டாக்டர்கள், அந்த பதவிகளை வகித்து மருத்துவ உலகிற்கு மாபெரும் சேவை செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான தலைவராக டாக்டர் வேணியும், செயலாளராக டாக்டர் கே.எஸ்.ஜெயராணி காமராஜுவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள். டாக்டர் கே.எஸ் ஜெயராணி காமராஜ் பிரபல குழந்தையின்மை சிகிச்சை நிபுணர். வடபழனியில் அமைந்திருக்கும் ‘ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம்’ என்ற புகழ்பெற்ற மருத்துவமனையின் இயக்குனராக செயல்படுகிறார். 29 ஆண்டுகளாக மருத்துவ சேவையாற்றிவரும் இவர், நவீன கருத்தரிப்பு தொழில்நுட்பம் மூலம் குழந்தை இல்லாத தம்பதிகளின் ஏக்கத்தை தீர்த்து, அவர்களுக்கு தாய்மைப்பேறு கிடைக்கச் செய்துகொண்டிருக்கிறார்.

‘குழந்தையின்மை என்ற குறை இனி யாருக்கும் இல்லை’ என்கிற கோட்பாட்டுடன் மருத்துவ சேவையாற்றி வரும் இவர் பல ஆயிரம் பெண்களை நவீன மருத்துவத்தின் மூலம் தாய்மையடைய செய்திருக்கிறார். இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மிகசிக்கலான பிரசவங்களையும் எளிதாக கையாண்டு கைராசியான டாக்டர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான மருத்துவ மாநாடு மற்றும் கருத்தரங்குகளில் பங்குபெற்றிருக்கும் டாக்டர் கே.எஸ் ஜெயராணி மருத்துவத்துறைக் கல்வி மற்றும் சேவைகளுக்காக ஏராளமான பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றிருக்கிறார். இவரது கணவர் டாக்டர் டி. காமராஜ் பிரபல பாலியல் மருத்துவ நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்னிந்திய மகப்பேறு மருத்துவர்கள் கூட்டமைப்பின் புதிய செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ் ‘‘மகப்பேறு மற்றும் மகளிர் நலம் சார்ந்த விஷயங்களில் பெண்களிடையே மருத்துவம் சார்ந்த விழிப்புணர்வை உருவாக்க இருப்பதாக’’ குறிப்பிட்டுள்ளார். டாக்டர் கே.எஸ். ஜெயராணி காமராஜ் புதிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதற்கு டாக்டர்களும், அவரிடம் சிகிச்சை பெற்று தாய்மையடைந்த ஏராளமான தாய்மார்களும், பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள்.