3300 தியேட்டர்களில் விஜய்யின் மெர்சல் படம் ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் விஜய் முதன் முறையாக 3 வேடங்களில் நடித்துள்ள படம் மெர்சல். இதில், சமந்தா, காஜல் அகர்வால் மற்றும் நித்யா மேனன் ஆகியோர் விஜய்க்கு ஜோடிகளாக நடித்துள்ளனர். சமீபத்தில், இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடயே நல்ல வரவேற்பைப் பெற்றதோடு உலக சாதனையும் படைத்தது. இதனைத் தொடர்ந்து, ட்ரைலரும் சாதனை படைக்கக் காத்திருப்பதாக விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் கூறி வருகின்றனர்.
இதற்காக, ட்ரைலரை சீக்கிரத்தில் வெளியிடுங்கள் என்று ட்விட்டரில் படக்குழுவினருக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர். ஆனால், படக்குழுவினர்கள், மெர்சல் படத்தின் ட்ரைலர் வெளியிடும் ஆசை தங்களுக்கு இருப்பதாகவும், ஆனால், அதை இப்போது வெளியிடும் திட்டம் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். மெர்சல் படம் வெளியாக ஒரேயொரு வாரம் மட்டுமே இருப்பதால் இப்படத்தின் மீதமுள்ள போஸ்ட் புரோடக் ஷன் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது.
இதனால், மெர்சல் ட்ரைலரை உருவாக்க நேரமில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அதே வேளையில், இப்படத்தின் புரோமோ வீடியோ அல்லது மெர்சல் ஸ்டில்ஸ் போன்றவை தீபாவளி வரை தினமும் ஒவ்வொன்றாக வெளிவரும் என்று படக்குழுவினர் உறுதியளித்துள்ளனர். இதன் காரணமாக ட்ரைலர் இல்லாமல் தத்தளித்து வந்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் ஆறுதல் அளித்துள்ளது. கேளிக்கை வரி பிரச்சனையால், மெர்சல் படம் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், திட்டமிட்டபடி தீபாவளி தினத்தில் கண்டிப்பாக வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும், உலகம் முழுவதும் மெர்சல் படம் எத்தனை தியேட்டர்களில் வெளியாகிறது என்பதை படத்தின் தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி அறிவித்துள்ளார். அதன்படி, மெர்சல் படம் உலகம் முழுவதும் சுமார் 3292 திரையரங்கில் வெளியாக இருக்கிறதாம். இன்னும் இதன் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என்றும், இந்த தீபாவளி மெர்சல் தீபாவளியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.