நாயகன் கவுதம் கார்த்திக் பர்மாவின் ரங்கூனில் வசித்து வருகிறார். அவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சென்னை வருகிறார். சென்னை வரும் அவருக்கு, நண்பர் ஒருவர் மூலம் அடகு கடை நடத்திவரும் சித்திக்கின் அறிமுகம் கிடைக்கிறது, அவருடைய கடையில் எடுபிடி வேலைக்கு சேர்கிறார்கள் மூவரும். நாளடைவில் கவுதமின் வேலை சித்திக்கு பிடித்துப் போகிறது. ஒரு பிரச்சினையில் சித்திக்கின் மகளை கவுதம் காப்பாற்றுகிறார். அதேபோல், சித்திக்கின் உயிருக்கும் ஆபத்து வரும்போது அவரையும் கவுதம் காப்பாற்றுகிறார். இதனால், கவுதம் மீது சித்திக் வைத்திருந்த பாசம் மேலும் அதிகமாகிறது.
அந்த வேளையில் நாயகி சானா மாக்பல்லை பார்க்கும் கவுதமுக்கு அவள்மீது காதல் துளிர்விடுகிறது. ஆரம்பத்தில் கவுதமை கண்டுகொள்ளாத சானா, பின்னர் அவர் செய்யும் நல்ல விஷயங்களால் ஈர்க்கப்பட்டு, காதலிக்கத் தொடங்குகிறார். இந்நிலையில், தனக்கு பணக்கஷ்டம் இருப்பதால் தங்க கடத்தல் வேலையை செய்தால் வாழ்க்கையில் முன்னேறலாம் என்று கவுதமிடம் சித்திக் ஆலோசனை கூறுகிறார். கவுதமும் சித்திக்கின் ஆலோசனையை ஏற்று தங்க கடத்தல் வேலையை தொடங்குகிறார். ஆரம்பத்தில் சிறிது சிறிதாக தங்க கடத்தல் வேலைகளை செய்துவருகிறார்கள்.
ஒருகட்டத்தில் இவர்களுடைய கடத்தல் தொழிலுக்கு போலீஸால் இடைஞ்சல் வரவே, பெரிய கடத்தல் ஒன்றை செய்துவிட்டு வாழ்க்கையில் செட்டிலாகிவிட முடிவு செய்கிறார்கள். அதன்படி, நிறைய தங்கத்தை எடுத்துக் கொண்டு பர்மா புறப்படுகிறார்கள். பர்மாவில் அந்த தங்கத்தை கைமாற்றிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டு திரும்பும் வேளையில் இவர்களது பணம் காணாமல் போகிறது. பணம் காணாமல் போனதால் அனைவரும் செய்வதறியாது திகைக்கிறார்கள். அந்த பணம் எங்கே போனது? கடைசியில் அவர்களுக்கு அந்த பணம் கிடைத்ததா? பணத்தை திருடியவர்கள் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்



